கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள சித்தாரி மலை கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் நேற்று முன்தினம் இரவு துப்பாக்கியுடன் 5 பேர் நுழைந்திருக்கிறார்கள். மாவோயிஸ்ட் என அறிமுகமான 5 பேரும், `சக மாவோயிஸ்ட் ஒருவரை காட்டு யானை தாக்கியதில் கடுமையான காயம் ஏற்பட்டிருக்கிறது. தொட்டில் கட்டி அவரைச் சுமந்து வந்திருக்கிறோம். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுங்கள்’ எனச் சொல்லிவிட்டு, அங்கிருந்து மறைந்துள்ளனர்.

இதைக் கேட்டு பதற்றமடைந்த அந்த குடும்பத்தினர், தங்கள் ஊராட்சி தலைவருக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர். சித்தாரி கிராமத்திற்குச் சென்ற ஊராட்சி தலைவர், காயத்துடன் அவதிப்பட்டுக் கொண்டிருந்த மாவோயிஸ்ட்டுடன் பேசி நடந்தவற்றைக் கேட்டறிந்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.
சித்தாரி கிராமத்திற்கு காவல்துறையினர் சென்றால் இரு தரப்பிடையே மோதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பிட்ட பகுதி வரை ஆம்புலன்ஸ் மூலம் அந்த மாவோயிஸ்ட்டை அழைத்து வருமாறும் ஊராட்சி தலைவரிடம் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட மாவோயிஸ்ட்டை 4 கிலோமீட்டர் தொலைவில் காத்திருந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ள கேரள மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள், “48 வயதான சுரேஷ் என்ற மாவோயிஸ்ட்டை 3 தினங்களுக்கு முன்பு காட்டு யானை தாக்கியுள்ளது. அவரின் கால் மற்றும் மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. 3 ஆண் மற்றும் 2 பெண் மாவோயிஸ்ட்டுகள் சேர்ந்து கம்பியில் தொட்டில் கட்டி சுமந்து வந்திருக்கிறார்கள். சிகிச்சை அளிக்க மலை கிராம மக்கள் உதவியை நாடியிருக்கிறார்கள். பரியாரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவக் கல்லூரி வளாகம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு நடைபெற்று வருகிறது ” என தெரிவித்துள்ளனர்.