`முதல்வரிடம் பேச முயன்றேன்' – பாரத் ஜோடோ யாத்திரையை பாதியில் நிறுத்திவிட்டு வயநாடு சென்ற ராகுல்!

கேரள மாநிலம், வயநாட்டில் வனவிலங்குகள் தாக்குதலில் மனிதர்கள் மரணமடையும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. காட்டு யானை தாக்குதலுக்கு ஆளாகி ஒரே வாரத்தில் இரண்டு பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று முன் தினம் புல்பள்ளி பகுதியைச் சேர்ந்த பால் என்பவர் யானை தாக்கி இறந்தார். ஒரே வாரத்தில் யானை தாக்குதலுக்கு இரண்டு பேர் மரணம் அடைந்த சம்பவம், வயநாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வனவிலங்குகளை கட்டுப்படுத்த தவறிய வனத்துறை மற்றும் அரசுக்கு எதிராக வயநாடு மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். நேற்று வயநாட்டு புல்பள்ளியில் வனத்துறையை கண்டித்து நடந்த போராட்டத்தில் வனத்துறை ஜீப்பை தடுத்து நிறுத்தி அதன் மீது மலர்வளையம் வைத்த சம்பவம் நடந்தது. மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து வயநாடு எம்.பி ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை பாதியில் நிறுத்தி வைத்துவிட்டு இன்று காலை வயநாட்டுக்குச் சென்றார். விமானம் மூலம் கண்ணூர் விமான நிலையத்துக்குச் சென்ற அவர், அங்கிருந்து கார் மூலமாக வயநாடு சென்றார்.

வயநாட்டில் வன விலங்குகள் – மனித எதிர்கொள்ளலில் இறந்தவர் குடும்பத்துக்கு ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.

வயநாடு படமலையில் யானை தாக்கியதில் மரணமடைந்த அஜிசின் வீட்டுக்கு ராகுல் காந்தி சென்றார். அங்கு அஜீசின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், அவரது குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் ராகுல் காந்தி உறுதி அளித்தார். பின்னர் காட்டு யானை தாக்கியதில் இறந்த புல்பள்ளியைச் சேர்ந்த டி.வி.பால் என்பவரது வீட்டிற்கு ராகுல் காந்தி சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும், மூடக்கொல்லி பகுதியில் புல் வெட்டச் சென்ற சமயத்தில் புலி தாக்கியதில் இறந்த பிரஜீசின் வீட்டுக்கும் ராகுல் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

வயநாட்டில் ராகுல் காந்தி

இது குறித்து ராகுல் காந்தி கூறுகையில், “வன விலங்குகள் பிரச்னை குறித்து மாநில அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். வயநாட்டின் நிலைமை மிகவும் மோசமான நிலையில் சென்றதை அடுத்தே நான் இங்கு வந்தேன். இதில் அரசியல் இல்லை. வனவிலங்குகள் பிரச்னைக்கு பக்கத்து மாநிலங்களின் உதவியுடன் தீர்வு ஏற்படுத்த வழிவகை செய்ய வேண்டும். வயநாட்டில் அனைத்து வசதிகளுடன்கூடிய மெடிக்கல் காலேஜ் அவசியம் என்ற மக்களின் கோரிக்கை மிகவும் முக்கியமானதாகும். அதற்காக முதல்வர் தலையிட்டு முயற்சி எடுக்க வேண்டும். அரசின் செயல்பாடு சொல்லும்படியாக இல்லாததால்தான் இங்கு நான் வர வேண்டிய நிலைமை ஏற்பட்டது. வனவிலங்கு தாக்குதலில் இறந்த குடும்பத்தினருக்கான இழப்பீடுகளை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். இழப்பீடுகள் வழங்குவதில் கால தாமதம் ஏற்படுத்துவது முறையானது அல்ல. வனவிலங்குகள் தாக்குதலில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சைக்கான பணத்தை அரசு வழங்க வேண்டும். வயநாட்டில் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். கேரள முதல்வரிடம் போனில் பேச இன்று காலை முயற்சித்தேன். அவரிடம் பேச முடியவில்லை. மாலையில் மீண்டும் பேச முயற்சிப்பேன். வயநாட்டு மக்களின் நிலைமையை கூறி புரியவைப்பேன்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.