‘Toxic Relationship’ குறித்து ஆழமாகப் பேசுகிறது ‘லவ்வர்’ திரைப்படம்.
படத்தில் பரஸ்பர காதல் வெளிப்பாடு, பிரிவின் துயர், ஆற்றாமை என சூழல்களுக்குத் தன் இசையால் மெருக்கேற்றியிருந்தார் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன். அந்த இசைக்கு தன் வரிகளால் வலுசேர்த்திருந்தார் பாடலாசிரியர் மோகன் ராஜன். இதற்கு முன்பு ‘குட் நைட்’ திரைப்படத்திலும் சமகால இளைஞர்களின் வெப் மீட்டரை சரியாகப் பிடித்து பாடல் வரிகளில் அசத்தியிருந்தார். தற்போது இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் கூட்டணியில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அவரிடன் பேசினோம்.
‘லவ்வர்’ படத்தோட பாடல்களுக்கு ரசிகர்களிடமிருந்து என்ன மாதிரியான வரவேற்பு இருக்கு?
“ரொம்பவே நல்லா இருக்கு. தினமும் என்னோட சமூக வலைதளப் பக்கத்துல எனக்கு சிலர் மெசேஜ் பண்றாங்க. ‘தேன் சுடரே’, ‘உசுர உருவி’ பாடல்கள் பலருக்கும் பிடிச்சிருக்கு. ‘விலகாதே’ பாடலுக்கு இன்னும் அதிகளவுல வரவேற்பு கிடைக்கும்னு நினைச்சேன். இனிவர்ற நாட்கள்ல அந்தப் பாட்டுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும். இப்போ ஒரு படத்தைப் பத்தின பேச்சு அதிகமான பிறகுதான் அந்த படத்திலுள்ள பாடல்களை பலரும் அதிகப்படியா கவனிக்குறாங்க. இப்படியான விஷயங்கள்தான் இப்போ தொடர்ந்து நடக்குது.”

ஷான் ரோல்டனோட தொடர்ந்து வேலைப் பார்க்குறீங்க, இந்த கூட்டணி பத்தி ?
“ ஷான் ரோல்டனோட முதன்முதல்ல என்னை வேலை பார்க்க வச்சது, ‘ஆகஸ்ட் 16,1947’ திரைப்படத்தோட இயக்குநர் பொன்ராம்தான். அதுக்குப் பிறகு ‘குட் நைட்’, ‘லவ்வர்’ படங்களோட தயாரிப்பாளர் யுவராஜ் என்னைத் தொடர்ந்து ஷானோட வேலைப் பார்க்க வச்சாரு. எங்க காம்பினேஷன் பலருக்கும் பிடிச்சிருக்கு. நா.முத்துகுமார்- யுவன், தாமரை- ஹாரிஸ் ஜெயராஜ் காம்போ மாதிரி எனக்கு இப்போ ஷான் கிடைச்சிருக்கார். பாடலாசிரியர் யுகபாரதியும் இமானோட சேர்ந்தார். அதன் பிறகு இவங்களோட காம்போ பலருக்கும் பிடிச்சது. மக்களுக்கு இவங்க ரெண்டு பேரும் சேர்ந்தா கண்டிப்பாக ஹிட் ஆகும்னு ஒரு பல்ஸ் கிடைக்கணும். அப்போதான் அந்த ஹிட் காம்போ உருவாகும். ஷான் ரோல்டனைப் பொறுத்த வரைக்கும் எனக்கு ரொம்ப சுதந்திரம் கொடுப்பார். என்னை ரொம்பவே நம்பி எனக்கு சுதந்திரம் கொடுப்பார். நம்பிக்கை இருந்தால் தான் நல்ல இணை உருவாகும். எனக்கு அவர் மேலேயும், அவருக்கு என் மேலேயும் நம்பிக்கை இருக்கு. இந்த நம்பிக்கையை ‘லவ்வர்’ படத்தோட ஆல்பம் அதிகப்படுத்தியிருக்குனு நினைக்கிறேன்.”
‘குட் நைட்’,’லவ்வர்’ படத்தோட பாடல்கள் சமகால இளைஞர்களோட காதல் பத்தி பேசுது, இன்றைய தலைமுறை இளைஞர்களை அதிகளவுல கவனிச்சு எழுதுனீங்களா ?
“ஆமா, நான் கவனிப்பேன். 80, 90, 2K கிட்ஸோட மாற்றத்தை நம்ம ஊடகம் வழியாக பார்க்கலாம். நான் இருந்த காலகட்டத்துல பாடல் ஆல்பம் புக் பண்ணிட்டு ஒரு வாரம் வரைக்கும் காத்திருப்பேன். ஆனா, இன்னைக்கு அப்படி இல்ல. இப்போ வைரல் அப்படிங்கிற வார்த்தையை எடுத்துக்குவோம். முன்னாடி ஒரு மைதானத்துல ஒருத்தர் விளையாடும்போது பலர் சுத்தி இருந்து வேடிக்கை பார்ப்பாங்க. இன்னைக்கு எல்லோரும் விளையாடுறாங்க. அதுல இருந்து ஒருத்தன் துள்ளி குதிச்சு ஓடி வர்றான். அப்படி துள்ளி குதிச்சு வெளிய வர்றதுதான் வைரல். நான் இப்படியான சமகால விஷயங்களை கவனிச்சு எழுதுறதுனாலதான் எனக்கு இளைஞர்களோட வைப் செட் ஆகுதுனு நினைக்கிறேன். டீ கடைகள்ல நிறைய விஷயங்களை கவனிப்பேன். இன்னைக்கு இருக்குற இளைஞர்களோட பலமும் பலவீனமும் ரெண்டு விஷயங்கள்தான். எந்தவொரு விஷயத்தையும் சுலபமாக மறந்திருவாங்க, சுலபமாக மனதையும் கொடுதிடுறாங்க. இது மாதிரியான விஷயங்களை கவனிச்சு எழுதுறதுனால இளைஞர்கள் விரும்புற படி இருக்குனு நம்புறேன். என்னை வச்சும் பல விஷயங்களை கனெக்ட் பண்ணி எழுதுவேன். நம்ம 2Kல பிறந்தால் எப்படி இருக்கும்னு யோசிச்சு எழுதுவேன்.”

பாடல்களுக்கு நீங்க நினைச்ச மாதிரியான வரவேற்பு இல்லாம தலைகீழாக சில சமயங்கள்ல மாறியிருக்கும். அதை எப்படி கடந்து போவீங்க ?
“இப்போ, ‘குட் நைட்’ படத்துல வர்ற ‘சில் மக்கா’ பாடலுக்கு நான் அதிகளவுல வரவேற்பு கிடைக்கும்னு எதிர்பார்த்தேன். ஆனா, ‘நான் காலி’ பாடல்தான் பயங்கரமாக ஹிட்டாச்சு. அந்த பாடல் வரிகளை பல சூழல்களுக்கு பலரும் பொறுத்திப் பார்க்க முடியும். அதுனாலதான் அந்த பாடல் பலருக்கும் பிடிச்சது. கிடைக்காததைவிட கிடைச்சது நல்லதுனு சொல்வாங்க. அப்படிதான் இந்த மாதிரியான சமயங்கள்ல நினைச்சு கடந்து போவேன். ஆனா, ஏக்கம் இருக்கும்தான். ‘நான் காலி’ பாடலோட வரவேற்பு அந்த ஏக்கத்தை காலி பண்ணிடுச்சு”
ஒரு பாடலாசிரியருக்கு எப்போ முழு சுதந்திரம் கிடைக்கும் ?
“எப்பவும் கிடைக்காது. கவிஞருக்கும் பாடலாசிரியருக்கும் வித்தியாசங்கள் இருக்கு. நினைச்சதெல்லம் எழுதுறவன் கவிஞன். கவிஞன் அவனோட சொந்த கவிதையை எழுதுவான். ஆனால், பாடலாசிரியர் மற்றொருவரோட மெட்டுக்கு மற்றவர் சொல்ற சூழ்நிலைக்கு எழுதுறவன். அதுக்கு எனக்கு சொந்தமானதில்ல. அவங்களோட பார்வைக்கு ஒரு பாடலாசிரியர் யோசிக்கணும். இசையமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர் சொல்றதை பண்றோம். அதுல சுதந்திரம் இருக்காது. அதை பாடலாசிரியர்கள் ஒத்துக்கணும். அப்போதான் கோபம் வராது. ஆனா, கம்ஃபோர்ட் இல்லாததையே கம்ஃபோர்ட்டாக நினைச்சு வேலைப் பார்ப்பேன். கேட்கிறவங்களுக்கு தேவையைப் பார்த்து என் பெஸ்ட்டை பண்ணி கொடுக்கிறதுதான் என் வேலை.”

பிறமொழிப் படங்களோட பாடல்களை தமிழ்ல எழுதும்போது இருக்கிற சவால்கள் என்னென்ன ?
“இப்போ சமீபத்துல ஹனுமன், அனிமல் படங்கள்ல வேலை பார்த்தேன். எனக்கு ‘777 சார்லி’ படத்துக்கு முழுமையான தெளிவான சூழல் குறித்தான விளக்கத்தைக் கொடுத்தாங்க. ஆனா, அனிமல் படத்துக்கு அடுத்த நாள் ரெக்கார்டிங் இருக்கும்போது சொன்னாங்க. சூழல் பத்தி கேட்பேன். அதுக்கு ‘அதுவொரு சூழ்நிலை’னு மேலோட்டமாக சொன்னாங்க இப்படியான விஷயங்கள் நடக்கும்போது கோபம் வரும். சில படங்களுக்கு தெலுங்கு, ஆங்கிலம்னு பிற மொழி பாடல் வரிகளை அனுப்புவாங்க. நான் தெலுங்கு, இந்தி தெரிஞ்சவங்ககிட்ட அர்த்தங்கள் கேட்டுத் தெரிஞ்சுகிட்டு ஒரு ஐடியா பிடிச்சு எழுதுவேன். இதுதான் பிறமொழி பாடல்கள்ல இருக்கிற சவால்கள்.”