Measures to increase voter turnout order to create awareness among voters | ஓட்டு சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை; வாக்காளர்களிடம் விழிப்புணர்வுக்கு உத்தரவு

பெங்களூரு : ”கடந்த சட்டசபை தேர்தலின்போது, மிக குறைந்த அளவில் ஓட்டுப்பதிவு இருந்த ஓட்டுச்சாவடிகளை அடையாளம் கண்டு, லோக்சபா தேர்தலில் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என, மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரியும், பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனருமான துஷார்கிரிநாத் உத்தரவிட்டார்.

பெங்களூரு நகரப் பகுதிகளில், ஓட்டுப்பதிவு சதவீதம் ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது. தேர்தல் அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை எடுத்தும், உயர்ந்தபாடில்லை.

தற்போது லோக்சபா தேர்தலிலும் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிப்பது தொடர்பாக, மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரியும், பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனருமான துஷார்கிரிநாத், நேற்று உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:

கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது, வழக்கத்தை விட குறைந்த அளவில் ஓட்டுப்பதிவு நடந்தது. எனவே மிக குறைந்த அளவில் ஓட்டுப்பதிவு நடந்த ஓட்டுச்சாவடிகளை அடையாளம் கண்டு, ஓட்டுப்பதிவு அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக தனி திட்டம் தீட்டி, விழிப்புணர்வு செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.

குறைந்த ஓட்டுப்பதிவு செய்த அடுக்குமாடி குடியிருப்புகளின் சங்கத்தினருடன் நேரில் பேசி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பெங்களூரு மத்திய, வடக்கு, தெற்கு ஆகிய மூன்று லோக்சபா தேர்தல் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட தொகுதிகளில் பரிசீலனை கூட்டங்கள் நடத்தி, ஓட்டுப்பதிவு அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தேர்தல் சிறப்பு கமிஷனர் செல்வமணி, ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு மேற்பார்வை குழு தலைவர் காந்தராஜு, நகரின் மூன்று லோக்சபா தொகுதி தேர்தல் அதிகாரிகள் உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.