800-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசும், 300-க்கும் மேற்பட்ட பழங்குடி இன மக்கள் வாழும் நாடு, பப்புவா நியூ கினியா. மலை சார்ந்த பகுதியான இங்கு, இன்று வரை இனக் குழுக்களுக்கு மத்தியில் இடப் பகிர்வு, பொருளாதாரம் தொடர்பான மோதல்கள் தொடர்கதையாக இருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக, எங்கா மாகாணத்தின் வபெனமண்டா மாவட்டத்தில் நேற்று காலை முதல், இரண்டு பழங்குடியினக் குழுகளுக்கு மத்தியில் மோதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த மோதலைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த மோதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சாலைகளிலும், ஆற்றங்கரையிலும், புல்வெளிகளிலும் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை 64 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த இரு குழுக்களுக்கு இடையேயான மோதலில் இறந்தவர்களில் பலர், AK47, M4 போன்ற உயர் ஆற்றல்மிக்க துப்பாக்கிகளைப் பயன்படுத்திக் கொல்லப்பட்டிருப்பதாகக் காவல்துறை தெரிவித்திருப்பது, சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதே இனக் குழுக்கள்தான் கடந்த ஆண்டும் சண்டையிட்டுக் கொண்டன. அதில் 60 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மோதல் தொடர்பாக பப்புவா நியூ கினியா நாட்டின் எதிர்க்கட்சியினர், “சுமார் 100 ராணுவ வீரர்கள் அந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அங்கு மோதல் கட்டப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, இயல்புநிலை திரும்பியபாடில்லை. இந்த வன்முறைக் காட்சிகளில் பழங்குடியின மக்கள் உயர் ரகத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவர்களுக்கு இத்தகைய துப்பாக்கிகளும், தோட்டாக்களும் எப்படிக் கிடைத்தன என்று தெரியவில்லை. எனவே, அதிகாரிகள் அது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும், உடனடியாக அங்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும்” என வலியுறுத்தி வருகின்றன.