இந்தியாவின் நிதி உதவியுடன் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள பாரத் – லங்கா பத்தாயிரம் வீட்டுத் திட்டத்துக்கான அங்குரார்ப்பண விழா, அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில், இலங்கைக்கான இந்திய தூதுவர் கௌரவ. சந்தோஷ் ஜாவின் பங்கேற்புடன் நேற்று (19) நடைபெற்றது.
பத்தாயிரம் வீடுகளில் முதற்கட்டமாக 1300 வீடுகள் நுவரெலியா, கண்டி, பதுளை, மாத்தளை, கேகாலை, குருணாகல், இரத்தினபுரி, காலி, களுத்துறை, மொனராகலை ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் 45 பெருந்தோட்டங்களில் நிர்மாணிக்கப்படுகின்றன.
அங்குரார்ப்பண விழாவின் பிரதான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இதன்போது, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் வரவேற்புரை நிகழ்த்தினார். இத்திட்டத்துக்கு நிதி உதவி வழங்கிய இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் அமைச்சர் தனது நன்றிகளைத் தெரிவித்;தார். இதற்கு தலைமைத்துவம் வழங்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அவர்களுக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
இதேவேளை, இந்த நிகழ்வுக்கு சமாந்தரமாக 45 பெருந்தோட்டங்களில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் பங்கேற்புடன் அங்குராரப்பண நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், இந்திய தூதுரக அதிகாரிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.