‘மணல் கொள்ளை’ ஆட்சியில் ‘மண்ணுயிர் காப்போம்’ திட்டமா? – ஓபிஎஸ் விமர்சனம் @ வேளாண் பட்ஜெட்

சென்னை: “தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையினால் விவசாயிகளுக்கு எவ்விதமான பயனும் இல்லை. விவசாயிகளின் நலன்களைப் பூர்த்தி செய்யாத அறிக்கையாக வேளாண் நிதிநிலை அறிக்கை விளங்குகிறது” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “முதனிலைத் தொழிலாக விளங்கும் வேளாண் தொழிலை வளர்ச்சி அடையச் செய்வதற்கும், உணவு தானிய உற்பத்தியை பெருக்குவதற்கும், உணவு தந்துதவும் உழவர்களின் வாழ்க்கைத் தரத்தினை முன்னேற்றுவதற்கும் தேவையான திட்டங்களை உள்ளடக்கியதாக வேளாண்மை நிதி நிலை அறிக்கை அமையும் என்று விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில், இன்று தமிழக சட்டமன்றப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 2024-2025 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை விவசாயிகளிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேளாண்மைக்கென்று தனி நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது என்ற பெருமையைத் தவிர, இந்த நிதிநிலை அறிக்கையால் பயனேதும் இல்லை என்று விவசாயப் பெருங்குடி மக்கள் தெரிவிக்கின்றனர். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், வாழை, மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு, பருப்பு வகைகள் உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால், இது குறித்து எவ்விதமான அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.

தமிழகம் முழுவதும் உள்ள தென்னை விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தென்னை மரத்திலிருந்து ‘நீரா’ போன்ற பதநீர் இறக்கி விற்பனை செய்ய ஊக்குவிக்கப்படும் என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து ஏதும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது தென்னை விவசாயிகளிடையே பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாயாக உயர்த்தித் தரப்படும் என்றும், கரும்புக்கான ஆதார விலை டன் ஒன்றிற்கு 4,000 ரூபாயாக உயர்த்தித் தரப்படும் என்றும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என்று விவசாயிகள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்களுக்கு கிடைத்தது வெறும் ஏமாற்றமே.

கடந்த மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மண் மண் வளமே அழியும் அளவுக்கு மணல் கொள்ளை நடந்து கொண்டிருக்கின்ற நிலையில், மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை தி.மு.க. அரசு அறிவித்து இருப்பது சாத்தான் வேதம் ஒதுவது போல் உள்ளது.

இயற்கை சீற்றங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பிலிருந்து அவர்கள் மீண்டு வரும் வகையில் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், 2024-2025 ஆம் ஆண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்த 1,775 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே திட்டத்திற்காக, சென்ற ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் 2,337 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 562 கோடி ரூபாய் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பதிலை வேளாண் துறை அமைச்சர் தனது பதிலுரையில் எடுத்துரைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு அரசு சார்பில் செய்யப்படாததால், அதற்கான இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே, இதற்கான இழப்பீட்டினை வழங்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

சென்ற ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், பனை ஆராய்ச்சி நிலையம் அமைக்க 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அதுபற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டதா அல்லது கைவிடப்பட்டு விட்டதா என்பது பற்றி வேளாண் துறை அமைச்சர் தனது பதிலுரையில் தெரிவிக்க வேண்டும்.

சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையில், தமிழக விவசாயிகளின் இயற்கை உரத் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, சேலம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆலைக்கழிவு மண்ணிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிக்க கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இதுகுறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை.

இந்தத் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து தி.மு.க அரசு தெளிவுபடுத்த வேண்டும். மொத்தத்தில், இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையினால் விவசாயிகளுக்கு எவ்விதமான பயனும் இல்லை. விவசாயிகளின் நலன்களைப் பூர்த்தி செய்யாத அறிக்கையாக வேளாண் நிதிநிலை அறிக்கை விளங்குகிறது” என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.