லக்னோ :உத்தர பிரதேசத்தில், 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 14,000 திட்டங்களுக்கு ஒரே நேரத்தில் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இது திட்டங்கள் செயல்படுத்துவதில் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, கடந்தாண்டு, சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடந்தது.
ஒப்பந்தம்
இதில், பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இந்த ஒப்பந்தங்களை நிறைவேற்றும் வகையில், திட்டங்கள் செயல்படுத்துவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஏற்கனவே மூன்று முறை நடந்துள்ளது.
நான்காவது கட்டமாக, தற்போது, 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 14,000 திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.
உற்பத்தி துறை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உணவு பதப்படுத்துதல், ரியல் எஸ்டேட், கல்வி, பொழுதுபோக்கு என, பல்வேறு துறைகளில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
இதற்கான அடிக்கல் நாட்டி, பிரதமர் மோடி பேசியதாவது:
உ.பி.,யில் இவ்வளவு முதலீடுகள் குவியும் என, எட்டு ஆண்டுகளுக்கு முன், யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். கடந்த எட்டு ஆண்டு கால இரட்டை இன்ஜின் அரசின் நிர்வாகத்தால் தற்போது இங்கு முதலீடுகள் குவியத் துவங்கியுள்ளன.
முதலீடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்த சிவப்பு நாடா முறை ஒழிக்கப்பட்டு, அதற்கு பதிலாக முதலீடுகளுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது.
விவசாயத்தை புதிய பாதையில் இட்டுச் செல்லும் வகையில், விவசாயிகளுக்கு பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. நம் நாட்டின் உணவுப் பொருட்கள், உலகெங்கும் உள்ள வீடுகளை சென்றடைய வேண்டும். இதற்காக, விவாயிகளுடன் கூட்டணி அமைக்க தொழில்துறையினர் முன்வர வேண்டும்.
விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும், தொழில்துறைக்கும் ஒரே நேரத்தில் சிறந்த பலன் இதனால் கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, உத்தர பிரதேசத்தின் சம்பலில், ஸ்ரீ கல்கி தாம் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
இந்த விழாவில் பங்கேற்பதற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்ததால், இந்த கோவிலைக் கட்டும் கல்கி தாம் பீடாதிபதியான ஆச்சாரியா பிரமோத் கிருஷ்ணம், சமீபத்தில் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டார்.
பூமி பூஜை
இந்நிலையில் நேற்று நடந்த அடிக்கல் நாட்டு விழாவில், பிரமோத் கிருஷ்ணம், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பூமி பூஜையில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:
ஒரு பக்கம் நாம் கோவில் கட்டுகிறோம், புனரமைக்கிறோம்.
அதே நேரத்தில், பல பெருந்தொழில் நிறுவனங்களின் ஆலைகளை அமைக்கிறோம். அறிவியல் வளர்ச்சியிலும் கோலோச்சி வருகிறோம்.
உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடு என்ற பெருமையை அடைந்தோம். நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கினோம்.
காசி விஸ்வநாதர் கோவில், ராமர் கோவில் என, நாட்டில் பெரும் பணிகள் நடந்துள்ளன. இந்த நாடு எனும் கோவிலை புனரமைக்கும் பெரும் கடமையை கடவுள் எனக்கு அளித்துள்ளார். இது பெரும் பாக்கியமாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்