அமெரிக்காவின் வாஷிங்டனைச் சேர்ந்தவர் ஜான் சீக்ஸ். இவர் ஜனவரி 6, 2023 அன்று பவர்பால் டிசி என்ற லாட்டரியை வாங்கியிருக்கிறார். குறிப்பிட்ட நாளில் அவருக்கு லாட்டரியில் 340 மில்லியன் டாலர் (ரூ.2,800 கோடிக்கு மேல்…) பரிசு விழுந்திருக்கிறது. அப்போதே அவர் அதைக் கவனிக்கத் தவறவிட்டாலும், இரண்டு நாள்களுக்குப் பிறகு டிசி லாட்டரியின் இணையதளத்தில், அவருடைய லாட்டரிக்குப் பரிசு விழுந்திருப்பதை அறிந்துகொண்டார்.

அதையடுத்து அவர் தன் நண்பர் ஒருவரை அழைத்து, சரியாக எண்கள் பொருந்துகிறதா… என்பதை உறுதி செய்துகொண்டார். அதைப் புகைப்படமாகவும் பதிவு செய்துகொண்டார். மேலும், டிசி லாட்டரி நிறுவனத்தை அணுகி தனக்கான பரிசு குறித்து முறையிட்டிருக்கிறார். அப்போது லாட்டரி நிறுவனம், “குறிப்பிட்ட லாட்டரிக்கு எந்தப் பரிசும் இல்லை. இணையப் பக்கத்தில் அந்தப் பரிசு லாட்டரி எண் தவறுதலாகப் பதிவாகியிருக்கிறது. எனவே, பரிசு எதுவும் கிடையது” என மறுத்திருக்கிறது.
அப்போது லாட்டரி முகவர்களில் ஒருவர், “இந்த லாட்டரிக்குப் பரிசு கிடையாது. அதைக் குப்பையில் வீசிவிடுங்கள்” எனத் தெரிவித்திருக்கிறார். ஆனால், அதைக் குப்பையில் வீசாமல், பத்திரப்படுத்திய ஜான் சீக்ஸ், நீதிமன்றத்தின் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்திருக்கும் மனுவில், “கேமிங் அமைப்பின் OLG விதிமுறைகளின்படி, லாட்டரி பரிசுப் பெற்ற வெற்றியாளர் நான்.
ஆனால், என் லாட்டரி எண் தவறுதலாக இணையத்தில் பதிவேற்றப்பட்டிருப்பதாகவும், அதனால், பரிசு கோரிக்கை மறுக்கப்பட்டதாகவும் லாட்டரி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. எனக்குரியப் பரிசைப் பெற்றுத் தரவேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஜான் சீக்ஸின் வழக்கறிஞர், ரிச்சர்ட் எவன்ஸ், “வெற்றிப் பெற்ற எண்களுக்குரிய லாட்டரி என் தரப்பு வாதியிடம் இருக்கிறது. எனவே, முழு ஜாக்பாட் தொகையையும் அவருக்கு வழங்க வேண்டும். இந்த வழக்கு, லாட்டரி நடவடிக்கைகளின் நேர்மை மற்றும் பொறுப்புக்கூறல் பற்றிய முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது…