பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இதில், 2024-25-ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையை வரி விதிப்பு மற்றும் நிதி நிலைக்குழு தலைவர் சர்ப ஜெயாதாஸ் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை மேயர் பிரியா வாசித்தார்.
கல்வி துறைக்கான பட்ஜெட்டைப் பொறுத்தவரையில், 2024-2025ஆம் கல்வியாண்டில் மொத்தம் 419 பள்ளிகளில் LKG வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணாக்கர்களுக்கு ரூ. 8.50 கோடி மதிப்பீட்டில் பள்ளிச் சீருடைகள் வழங்கப்படும் என்றும், 255 மாநகராட்சிப் பள்ளிகளில் ரூ.7.64 கோடி மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, சென்னைப் பள்ளிகளில் 6 – 12-ஆம் வகுப்பு மாணாக்கர்கள் வளர்இளம் பருவத்தில், எதிர்கொள்ளும் பிரச்னைகளை தவிர்ப்பதற்காக ரூ.35.00 இலட்சம் செலவில் 10 ஆலோசகர்கள் தற்காலிகப் பணியாளர்களாக பணியமர்த்தப் படுவார்கள் எனவும், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு இசைக்குழுவினை அமைக்க 11 பள்ளிகளுக்கு மொத்தம் ரூ.11.00 இலட்சம் நிதி ஒதுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 10 ஆம் வகுப்பு மாணாக்கர்கள் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மீண்டும் சென்னைப் பள்ளிகளிலேயே 11-ஆம் வகுப்பில் சேர்ந்தால், அவர்களில் 50 மாணாக்கர்களை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ISRO) மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) போன்ற இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தவிர, கவுன்சிலர்களைத் தலைவராகக் கொண்டு “குழந்தைகள் பாதுகாப்பு குழு”, பாலின குழுக்கள் உள்ளிட்ட 27 அறிவிப்புகள் கல்வித்துறை தொடர்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கால்நடை கட்டுப்பாடு:
பொது சுகாதாரத்துக்கான பட்ஜெட்டைப் பொறுத்தவரையில், சென்னை மாநகராட்சி சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கால்நடைகளை பிடிக்கும் பணிக்காக வருடத்திற்கு ரூ.1.16 கோடி செலவினத்தில் 1,2,3,4,7,11,12,14 மற்றும் 15 ஆகிய 9 மண்டலங்களுக்கு, தலா 5 நபர் வீதம் 45 தற்காலிக பணியாளர்கள், சுய உதவி குழுக்கள் மூலம் நியமிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், சென்னை மாநகராட்சியில் வளர்க்கப்படும் மாடுகளை முறைப்படுத்த போதிய இடவசதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கொண்டுள்ள மாட்டு உரிமையாளர்களின் `மாட்டுத் தொழுவங்களுக்கு உரிமம் வழங்கும் திட்டம்’ நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தவிர, சென்னை மாநகராட்சியின் தெற்கு வட்டாரத்தில் புதியதாக ஒரு மாட்டுத்தொழுவம் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தெருநாய்கள் கட்டுப்பாடு:
அதேபோல, சென்னை மாநகர எல்லைக்குள் சுற்றித் திரியும் தெரு நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த, நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்வது மற்றும் புதியதாக 7 நாய் பிடிக்கும் வாகனம் கூடுதலாக கொள்முதல் செய்யும் திட்டத்திற்காக ரூ.70.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், வடக்கு, மத்தியம் மற்றும் தெற்கு ஆகிய வட்டாரங்களுக்கு தலா ஒன்று வீதம் மூன்று நடமாடும் கால்நடை தடுப்பூசி மருந்து செலுத்தும் வாகனங்கள் (Mobile Veterinary Vaccination Vehicles) ரூ.60.00 இலட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்ப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இவை தவிர, நோய் பரப்பும் கொசுக்களுக்கான மருந்தின் எதிர்ப்பு சக்தியை கண்டறிய Vector Control Monitoring Lab அமைத்தல், பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து நான்காம் நிலை தொழிளாளர்களுக்கும் ரூ.8.00 கோடி நிதி ஒதுக்கீட்டில் முழு உடல் பரிசோதனை செய்தல், சென்னை மாநகராட்சியில் தாய்மார்களுக்கான மகப்பேறு சிறப்பு அழைப்பு மையம் (High Risk Mother’s Call Centre) அமைத்தல், பெருநகர சென்னை மாநகராட்சியில் இளஞ்சிறார்களுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் (Early Intervention Center) அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் பொது சுகாதாரத்தின் கீழ் அறிவிக்கப்பட்டது.

இயந்திரப் பொறியியல் துறையைப் பொறுத்தவரையில், பூங்காக்கள் மற்றும் சாலை நடுவன்களில் உள்ள செடி கொடிகளுக்கு நீர் ஊற்றும் பொருட்டு 6 எண்ணிக்கையில் தண்ணீர் டேங்கர் லாரிகள் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும் எனவும், சென்னைப் பள்ளி மாணாக்கர்களை கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து செல்வதற்காக 4 பள்ளி பேருந்துகள் ரூ.1.16 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, கட்டடம் துறையைப் பொறுத்தவரையில்,சென்னை மாநகராட்சியில் உள்ள மயான பூமிகள் ரூ.10 கோடி செலவில் நவீன முறையில் மேம்படுத்தப்படும் எனவும், மாநகராட்சியின்கீழ் அமைந்துள்ள அலுவலகக் கட்டடங்களிலும் `தமிழ் வாழ்க, தமிழ் வளர்க’ பெயர் பலகை அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முக்கியமாக மழைநீர் வடிகால் துறையைப் பொறுத்தவரையில், சென்னை மாநகராட்சி வெள்ள தடுப்புப் பணியாக மழை காலங்களில் மழைநீர் சேகரிக்கும் குளமாகவும் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தவிர்க்கவும், குளங்கள் மற்றும் பூங்காக்களில் Sponge park அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்., முதற்கட்டமாக, மண்டலம் 2, மாத்தூர் எம்.எம்.டி.ஏ காலனியில் உள்ள குளத்தினை பரிச்சார்த்த முறையில் ரூ.8.00 கோடி மதிப்பீட்டில் Sponge park-ஆக வடிவமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 2024-25 ஆம் ஆண்டில் பெருநகர சென்னை மாநகரில் உள்ள 8 நீர்நிலைகளை ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை மாநகராட்சியில் ஆண்களுக்கான உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பெண்களுக்கான பிரத்தியேக உடற்பயிற்சி கூடம் ஏதும் இல்லை என்ற குறையை போக்க ஒரு வார்டுக்கு ஒன்று என்ற வீதத்தில் பெண்களுக்கான “EmpowHER உடற்பயிற்சி கூடம்” 200 வார்டுகளிலும் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அதிரடியாக் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்புக்கு பெண் கவுன்சிலர்கள் பலத்த கரகோசம் எழுப்பி வரவேற்பு தெரிவித்தனர். மேலும், சென்னை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் உள்ள 19 விளையாட்டுத்திடல்கள் ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் எனவும் பூங்கா துறையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

திடக்கழிவு மேலாண்மை… தனி ஆப்:
சென்னை மாநகராட்சியில் பொது மக்கள் தாங்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் இருக்கும் மருத்துவமனைகள் மற்றும் பொதுக்கழிப்பிடங்கள் இருக்கும் இடத்தினை அறியும் வகையில் புதிய அலைபேசி வலைதள செயலி உருவாக்கி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் எனத் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள 1,347 நிழற்குடைகளில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக தலா இரண்டு குப்பைத் தொட்டிகள் ரூ.1.35 கோடி நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மன்றம்:
மேம்பாட்டு நிதி உயர்வு:
மன்றத்தை பொறுத்தவரையில், 2024 2025 ஆம் நிதியாண்டு முதல் பெருநகர சென்னை மாநகராட்சி “மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதி”யானது ரூ.2.00 கோடியிலிருந்து ரூ.3.00 கோடியாகவும் உயர்த்தப்படும் எனவும், மாமன்ற உறுப்பினர்களுக்கு “வார்டு மேம்பாட்டு நிதி” ரூ.40.00 இலட்சத்திலிருந்து ரூ.45.00 இலட்சமாக உயர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கவுன்சிலர்களுக்கு TAB:
இவை தவிர, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் உள்ள பணிகளை மேம்படுத்தவும், காகிதமில்லா நடைமுறையினை கொண்டு வருவதற்கும், அவசியம் கருதியும், ரூ.1.00 கோடி மதிப்பீட்டில் 200 எண்ணிக்கையிலான TAB கொள்முதல் செய்து மாமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்புக்கும் மாநகராட்சி கவுன்சிலர்கள் மேசையைத் தட்டி வரவேற்பு தெரிவித்தனர். இவை தவிர, மருத்துவ சேவைகள் துறை, பாலங்கள், பேருந்து சாலைகள், வருவாய் உள்ளிட்ட துறைகளுக்கான திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

மேயரின் உரை முடிந்த பிறகு, வரி விதிப்பு மற்றும் நிதி நிலைக்குழு தலைவர் சர்ப ஜெயாதாஸ் சென்னை மாநகராட்சியின் வருவாய் வரவினங்கள், செலவினங்கள் குறித்து உரையாற்றினார். அதில், 2024-2025 ஆம் நிதியாண்டின் வருவாய் கணக்கு தலைப்பில், வருவாய் வரவு ரூ.4464.60 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.4727.12 கோடியாகவும் இருக்கும். மூலதன வரவு ரூ.3455.00 கோடியாகவும், மூலதனச் செலவு ரூ.3140.58 கோடியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, நாளை (22.02.2024) காலை 10 மணியளவில் வரவு செலவு திட்டத்தின் மீது மன்றத்தில் விவாதம் நடைபெற்று வரவு செலவுத் திட்டத்திற்கான ஒப்புதல் வழங்கும் நிகழ்வு நடைபெறும் என அறிவித்து மாமன்றக் கூட்டத்தை ஒத்திவைத்தார் மேயர் பிரியா.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY