அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட A.V. ராஜு என்பவர் 2017ம் ஆண்டு நடந்த கட்சித் தலைமைப் பிரச்னையைத் தொடர்ந்து கூவத்தூரில் அப்போதைய அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
அதில், நடிகை த்ரிஷாவை இழிவுபடுத்தும் நோக்குடன், சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது தொடர்பாக கணொலிகளும், பதிவுகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளான நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து இருந்தனர்.

நடிகை த்ரிஷாவும் சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றிப் பரவிவந்த சர்ச்சைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ட்வீட் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில் “கவனம் பெறுவதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான, கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது. இவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன்.
இனி இது குறித்து என் சார்பாக, சட்டத்துறை நிபுணர்கள் பதிலளிப்பார்கள்” என்று சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இந்நிலையில் தற்போது நடிகை த்ரிஷா தன்னை பற்றி அவதூறாகப் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி A.V. ராஜுவுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி இருக்கிறார்.
— Trish (@trishtrashers) February 22, 2024
அதில் “தன்னைப் பற்றி அவதூறாகப் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி A.V.ராஜு, 24 மணி நேரத்துக்குள் முன்னணி செய்தி நிறுவனங்கள் வாயிலாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி ஏ.வி. ராஜு மன்னிப்பு கேட்காவிட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்” என நோட்டீஸ் மூலம் அவருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அந்த நோட்டீஸை தனது ‘X’ வலைதளப் பக்கத்திலும் த்ரிஷா பகிர்ந்திருக்கிறார். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.