சென்னை: தன்னை கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழக்கிறஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதிமுகவின் சட்டதிட்டங்களுக்கு விரோதமாக, அதிமுகவின் ஒழுங்கை குலைக்கும் வகையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதாகக் கூறி, சேலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜுவை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக பிப்ரவரி 17-ம் தேதி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக ராஜு சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், “என்னை நீக்குவதாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கட்சி விரோத நடவடிக்கை என்ன என்பது குறித்து விளக்கப்படவில்லை. மேலும், அதிமுக உட்கட்சி விதிப்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் எதுவும் அனுப்பாமல் நேரடியாக நீக்கியது தவறு. எனவே, என்னை கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.