'அமுல்' நிறுவனத்தை உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி நிறுவனமாக மாற்ற வேண்டும் – பிரதமர் மோடி

ஆமதாபாத்,

குஜராத்தை மையமாக கொண்டு இயங்கி வரும் ‘அமுல்’ பால் உற்பத்தி நிறுவனம் மாநில கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் கீழ் இயங்கி வருகிறது. இந்த கூட்டுறவு சங்கத்தின் பொன்விழா கொண்டாட்டம் நேற்று நடந்தது. ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த விழாவில் விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் என சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, “‘அமுல்’ நிறுவனம் சர்தார் வல்லபாய் படேலின் வழிகாட்டுதலின் கீழ் கைரா மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கமாக நிறுவப்பட்டது. பின்னர் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு வந்தது.

அரசும், கூட்டுறவுத்துறையும் எப்படி இணைந்து செயல்பட முடியும் என்பதற்கான ஒரு மாடலாக இது விளங்குகிறது. அந்த மாடலுக்கு நன்றி. இன்று உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இந்தியா மாறியிருக்கிறது. 10 ஆண்டுகளில் இந்தியாவில் தனிநபருக்கு பால் கிடைப்பது 40 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகின் பால் உற்பத்தித்துறை 2 சதவீத வளர்ச்சியில் இருக்கும் நிலையில், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 சதவீதமாக உள்ளது.

இந்திய பால் வளத்துறையின் மொத்த விற்றுமுதல் ரூ.10 லட்சம் கோடியாக உள்ளது, இது நெல், கோதுமை மற்றும் கரும்பு உற்பத்தியின் மொத்த விற்றுமுதலை விட அதிகம். இந்த துறையில் பெண்கள்தான் முன்னணியில் இருக்கின்றனர். பால் உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள மொத்த தொழிலாளர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள். இவர்களின் பங்களிப்பால் அமுல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற, பெண்களின் நிதி சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம்.

சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் தோன்றிய அனைத்து பிராண்டுகளிலும், ‘அமுல்’ மிகவும் பிரபலமான ஒன்றாகும். தற்போதைய நிலையில் அமுல் (குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு) உலகின் 8-வது பெரிய பால் உற்பத்தி நிறுவனமாக உள்ளது. இதை நீங்கள் அனைவரும் சேர்ந்து உலகின் மிகப்பெரிய நிறுவனமாக மாற்ற வேண்டும்.

இந்த முயற்சியில் எனது அரசு உங்களுடன் இருக்கிறது. இது மோடியின் உத்தரவாதம். ‘அமுல்’ பிராண்ட் என்பது கால்நடை வளர்ப்பவர்களின் திறன்களின் அடையாளமாகும். அமுல் தயாரிப்புகள் இப்போது 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்கப்படுகின்றன. 36 லட்சம் விவசாயிகள் மற்றும் 18,000 கூட்டுறவு சங்கங்களின் இந்த வலையமைப்பு தினசரி ரூ.200 கோடி மதிப்புள்ள 3.5 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்கிறது.வலுவான கிராமப் பொருளாதாரம் அவசியம். சிறு விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துதல், கால்நடைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் மீன்பிடித்தல் மற்றும் தேனீ வளர்ப்பு போன்ற தொடர்புடைய பணிகளின் மூலம் விவசாயிகளுக்கு எவ்வாறு அதிக வருமானம் பெற முடியும்? என்பதில் எங்கள் கவனம் உள்ளது.

கூட்டுறவு சங்கங்களுக்கு உதவும் வகையில் எனது தலைமையிலான பா.ஜனதா அரசு ரூ.1 லட்சம் கோடி அளவிலான நிதியை உருவாக்கி இருக்கிறது. மேலும் கால்நடை வளர்ப்புத்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காகவும் ரூ.30 ஆயிரம் கோடி நிதி உருவாக்கப்பட்டு இருக்கிறது” என்று அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.