சொந்த ஊர்க் கோயில் குடமுழுக்கு விழாவில் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு, அதை முன்னின்று நடத்திச் சிறப்பித்தார் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள தளக்காவூர்தான் சரத்குமாருக்குப் பூர்வீகம். தளக்காவூர் வரசித்தி விநாயகர் கோயில், சிராவாயல் காமாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
சரத்குமார் குடும்பத்தினரின் குலதெய்வக் கோயில் என்பதால் மனைவி ராதிகா, மகள் வரலட்சுமி உட்பட உறவினர்களுடன் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டார்.

ஊர்மக்கள் முன்னிலையில் பூரணகும்பம், மாலை அணிவித்து, பரிவட்டம் கட்டி சரத்குமாருக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டது. ராதிகாவுடன் சேர்த்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
குடமுழுக்கு நிகழ்ச்சியில் கோயில் கலசத்திற்கு சிவாச்சார்யர்கள் வேத மந்திரங்களை ஓதி புனித நீர் ஊற்றும்போது சரத்குமார், ராதிகா, வரலட்சுமி உள்ளிட்டோர் கோயில் விமானத்தின் மீது ஏறி நின்று தரிசனம் செய்தார்கள்.

பின்பு கோயிலில் சிறப்பு அபிசேகங்களுடன் வழிபாடுகள் நடந்தன. அதில் சரத்குமார் குடும்பத்துடன் வழிபட்டனர். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதால், அதில் வெற்றி பெற வேண்டும் என்ற வேண்டுதலுடன் சரத்குமார் சொந்த ஊர்க் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்டதாக ஊர்காரர்கள் தெரிவித்தனர்.