தலைநகர் டெல்லியில் மொத்தம் உள்ள 7 மக்களவை தொகுதிகளும் தற்போது பாஜக வசம் உள்ளன. இங்கு இண்டியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தாமதமாகி வருவதாகவும், ஓரிரு நாளில் முடிவடைந்து விடும் என முதல்வர் கேஜ்ரிவால் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
தற்போது இரு கட்சிகள் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெற்கு டெல்லி, மேற்கு டெல்லி, வடமேற்கு டெல்லி மற்றும் புது டெல்லி ஆகிய தொகுதிகளில் ஆம் ஆத்மியும், சாந்தினி சவுக், கிழக்கு டெல்லி மற்றும் வடகிழக்கு டெல்லி தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மற்ற மாநிலங்களிலும் உடன்பாடு: டெல்லியை தொடர்ந்து குஜராத், கோவா, சண்டிகர், ஹரியாணா ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸோடு தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்தன. இவற்றோடு, உ.பி. மற்றும் ம.பி.யில் சமாஜ்வாதியோடு உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், 7 மாநிலங்களில் காங்கிரஸ் தொகுதி பங்கீடு உடன்பாட்டை எட்டுகிறது.