INDvsENG: அன்லக்கி ஆகாஷ் தீப் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்

ராஞ்சியில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகியிருக்கிறார். அவர் இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் 313 வது வீரர். ஆகாஷ் தீப்புக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தொப்பியை கொடுத்து சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அடியெடுத்து வைத்ததற்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு இப்போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டது. இதனால் அவருடைய இடத்துக்கு முகேஷ் குமார் அல்லது ஆகாஷ் தீப் ஆகியோரில் ஒருவர் விளையாட வாய்ப்பு என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்த சூழலில் ஆகாஷ் தீப்புக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை அவரும் சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்றே சொல்லலாம். டாஸ் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் இறங்கிய இங்கிலாந்து அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளையும் ஆகாஷ் தீப் தான் கைப்பற்றினார். அவருடைய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியால் இங்கிலாந்து வீரர்கள் திணறினர். இதனை சரியாக புரிந்து கொண்டு சரியான வேகம் மற்றும் லென்தில் பந்துகளை வீசி ஜாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப் ஆகியோரை பெவிலியனுக்கு அனுப்பினார். 

இருப்பினும் முதல் விக்கெட் ஆகாஷ் தீப்புக்கு அன்லக்கியாகவே அமைந்தது. அவர் இந்திய அணிக்காக 4வது ஓவரை வீச வந்தார். அப்போது 5வது பந்தில் தடுமாறிக் கொண்டிருந்த ஜாக் கிராலி கிளீன் போல்டானார். உடனே, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் விக்கெட்டை எடுத்த மகிழ்ச்சியில் ஆகாஷ் தீப் துள்ளிக் குதிக்க, மற்ற பிளேயர்களும் அவரை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஆனால், அந்த பந்து நோபால் என நடுவரால் அறிவிக்கப்பட்டது. இது ஆகாஷ் தீப் உள்ளிட்ட அனைத்து வீரர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு சில நொடிகளில் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட் எடுத்த மகிழ்ச்சி ஆகாஷ் தீப்புக்கு முடிவுக்கு வந்தது. இருப்பினும் அவர் தன்னுடைய நம்பிக்கையை இழக்கவில்லை. அடுத்தடுத்து ஓவர்களில் இன்னும் துல்லியமாக பந்துகளை வீசினார். அதற்கு பலனாக முதலில் பென் டக்கெட் விக்கெட் கிடைக்க, அதே ஓவரில் ஓல்லி போப்பும் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அடுத்த சில ஓவர்களில் ஜாக் கிராலியும் அவுட்டாகி வெளியேற இந்திய அணி நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.