சண்டிகர்: டில்லியை நோக்கி விவசாயிகள் நடத்தும் போராட்டத்தின்போது உயிரிழந்த 21 வயதான சுபாகரன் சிங் என்ற விவசாயியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் அளிப்பதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மான் அறிவித்துள்ளார்.
வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை பஞ்சாப் – ஹரியானா எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்துவதுடன் கண்ணீர் புகை குண்டும் வீசினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
பஞ்சாப் அருகே கானெரியில் விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தியபோது ஏற்பட்ட மோதலில், பஞ்சாப்பை சேர்ந்த 21 வயதான சுபாகரன் சிங் என்ற விவசாயி தலையில் குண்டடி பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை மறுத்துள்ள போலீசார், விவசாயிகள் மிளகாய் பொடி தூவியதில், 10 போலீசார் காயம் அடைந்ததாக குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் பஞ்சாப் விவசாயி சுபாகரன் இறந்தது வருத்தமளிப்பதாக அம்மாநில முதல்வர் பகவந்த்சிங் மான் வேதனை தெரிவித்தார். தொடர்ந்து, விவசாயியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரண தொகை அளிப்பதாவும், சுபாகரன் சிங்கின் சகோதரிக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மான் அறிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement