டெஹ்ராடூன்: உத்தராகண்ட் ஹல்துவானியில் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட வன்முறைக்கு காரணமாக இருந்த முக்கிய குற்றவாளியை உத்தராகண்ட் போலீசார் டெல்லியில் கைது செய்தனர்.
உத்தராகண்ட் மாநிலம் ஹல்துவானி நகரின் வன்புல்புரா பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. இதில் கடந்த பிப்.8ஆம் தேதி முஸ்லிம்கள் அதிகம் வாழும் மல்லீக் தோட்டம் எனும் இடத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மதரஸா இடிக்கப்பட்டதற்கு எதிராக அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். சுமார் 300 பேர் காயம் அடைந்தனர். கலவரம் பரவாமல் தடுக்க இணைய சேவை முடக்கப்பட்டது. ஹல்துவானி முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வன்முறை சம்பவத்துக்கு மூலக்காரணமாக செயல்பட்ட அப்துல் மாலிக் என்பவரை உத்தராகண்ட் போலீசார் டெல்லியில் இன்று (பிப்.24) கைது செய்தனர். அவருடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே இந்த வன்முறையில் தொடர்புடைய 78 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள அப்துல் மாலிக் உள்ளிட்டோர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக உள்ள அப்துல் மாலிக்கின் மகனையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மாலிக்கை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு ரூ.50,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று டிஜிபி அபினவ் குமார் அறிவித்துள்ளார்.
