மாண்டியா : “கே.ஆர்.எஸ்., அணையை சுற்றியுள்ள, கல்குவாரிகளுக்கு எதிராக போராடியதால், எனக்கு கொலை மிரட்டல் வந்தது,” என, மாண்டியா எம்.பி., சுமலதா கூறியுள்ளார்.
மாண்டியாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கே.ஆர்.எஸ்., அணையை சுற்றியுள்ள, கல்குவாரிகளில் பாறைகளை தகர்க்க பயன்படுத்தப்படும் வெடியால், அணையின் பாதுகாப்புக்கு பிரச்னை ஏற்படும் என்றும், அணையின் அருகே உள்ள, கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும், குரல் கொடுத்தேன். கல்குவாரிகளை தடை செய்ய, போராட்டம் நடத்தினேன்.
இதனால் எனக்கு பல கொலை மிரட்டல்கள் வந்தன. ஆனாலும் மக்கள் நலனுக்காக எனது போராட்டம் தொடர்ந்தது. இதன்மூலம் அணையை சுற்றி 20 கி.மீ., துாரத்திற்கு, கல்குவாரிகள் செயல்பட, கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.
முன்னாள் முதல்வர் குமாரசாமி, டில்லி சென்று திரும்பியது பற்றி எனக்கு தெரியாது. லோக்சபா தேர்தல் வேட்பாளர்களை அறிவிக்கும் வரை, எதுவும் கூற முடியாது.
மாண்டியாவை தவிர்த்து பல தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பு, எனக்கு முன் உள்ளது. ஆனால் மாண்டியா மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். நான் மீண்டும் போட்டியிடுவது உறுதி.
கடந்த ஐந்து ஆண்டுகளில், மாவட்டத்தில் நடந்த வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டு உள்ளது. சட்டவிரோத கருக்கலைப்பு பற்றி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பே கூறினேன். ஆனால் கருக்கலைப்பை தடுக்க, மாண்டியா மாவட்ட நிர்வாகம் தவறிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement