தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பா.ம.க, வி.சி.க, தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர் கட்சிகள் தொடர் கோரிக்கைகளை முன்வைக்கின்றன. இதற்கிடையில் `சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிராளிகள் அல்ல` என சட்டமன்றத்தில் முழங்கியிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின். அப்படியானால் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த ஸ்டாலின் தயங்குவது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

இந்தியா முழுக்க ஓ.பி.சி சமூக மக்களின், `சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டும்’ என்ற கோரிக்கை சமீப காலமாகவே தீவிரமடைந்து வருகிறது. நாடு விடுதலை அடையும் முன்பு, 1931-ம் ஆண்டு நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டுதான் தற்போது ஓ.பி.சி பிரிவினருக்கு கல்வியில், வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் நிலை இருக்கிறது. இதனால் மத்திய அரசு உடனடியாக சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்திட வேண்டும் என்ற கோரிக்கை ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் முன்வைத்து வருகிறார்கள்.
இதற்கிடையில் இந்தியாவில் முதல்முறையாக பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் விபரங்களையும் வெளியிட்டுள்ளது அம்மாநில அரசு. அதனை தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களும் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆயத்தமாகின. ஆனால் தமிழ்நாடு அரசோ `மத்திய அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும்’ என கோரி பிரதமருக்கு கடிதம் எழுதுகிறது.
பிப்ரவரி 22-ம் தேதி இதுகுறித்து சட்டமன்றத்தில் பா.ம.க-வின் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு விளக்கமளித்து பேசிய சபாநாயகர் அப்பாவு “மத்திய அரசு கணக்கெடுப்பு நடத்தினால்தான் அதனை நடைமுறைப்படுத்த முடியும். மாநில அரசு கணக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியமில்லை.

அரசியலமைப்பு சட்டத்தின்படி 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியும். தமிழ்நாடு அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென அழுத்தம் கொடுக்கிறோம், எனவே ஒருமித்த கருத்தோடுதான் தமிழ்நாடு அரசும் செயல்படுகிறது” என்றார், தொடர்ந்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் “சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிராளிகள் அல்ல” என்றார்.
தி.மு.க தரப்பில் தொடர்ந்து இப்படியான விளக்கம் தரும்நிலையில், அண்மையில் நடந்துமுடிந்த ஐந்து மாநில தேற்தல் பிரச்சாரங்களின்போது`காங்கிரஸ் கட்சி எந்தெந்த மாநிலங்களில் வெற்றிபெறுகிறதோ, அங்கு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்’ என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.
தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவரான திருமாவளாவன், வேல்முருகன் உள்ளிட்டோரும் `கணக்கெடுப்பு கட்டாயம் நடந்த வேண்டும்` இக்கோரிக்கையை வலுவாக முன்வைக்கிறார்கள் என்பதும் கவனிக்கதக்கது.

நம்மிடம் பேசிய பா.ம-வினர் சிலர், “சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தி.மு.க கொடுக்கும் விளக்கம் ஏற்புடையதாக இல்லை. சாதிவாரிக் கணக்கெடுப்பை மாநில அரசு நடத்தி பயனில்லை என்றால் பீகார் கணக்கெடுப்பு நடத்தியபோது மட்டும் அவர்களை கொண்டாடியது ஏன்? எங்கள் கட்சியை விடுங்கள், ராகுல் காந்தியும் திருமாவளவனும் அடிப்படை தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என இதன்மூலம் சொல்ல வருகிறதா தி.மு.க? சமூக நீதி இயக்கம் எனச் சொல்லிக் கொண்டு சமூக நீதிக்கெதிராக செயல்படுகிறார்கள் என்பதற்கு இதுவொரு அடையாளம். ஸ்டாலின் சொல்வதுபோல் சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிராளிகள் அல்ல என்றால் அவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என அறிவிக்க வேண்டும். அதுவரை அவர் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு எதிரானவர்கள்தான்” என காட்டமாக பேசினார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க செய்தி தொடர்பாளர் சல்மா “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதில் எங்களுக்கு எப்போதுமே எந்த மாற்றுக்கருத்தும் இருந்ததில்லை. உரியவர்களுக்கு உரியவை கிடைக்க வேண்டும் என்பதில் தி.மு.க உறுதியாக இருக்கிறது. அதன் வெளிப்பாடாகத்தான் முதலமைச்சரும் சட்டமன்றத்தில் பேசியுள்ளார்.

ராகுல் காந்தி சொல்வது போல இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றிபெறும். காங்கிரஸ் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் உறுதியாக இருக்கிறது. ஆட்சி மாறியதும், இந்திய அரசே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும். இதற்கிடையில் சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தை வைத்து தி.மு.க சமூக நீதிக்கு எதிரான இயக்கம் போல் கற்பிக்க முயல்கிறார்கள். ஆனால் தி.மு.க இடஒதுக்கீட்டுக்காகவும் சமூக நீதியை உறுதிசெய்திடவும் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஏராளம். மேலும் மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்புகள் நடத்தினாலும் சட்டபூர்வமான அங்கீகாரம் பெறுவதெல்லாம் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இதெல்லாம் தெரிந்தும் தேர்தல் நேர அரசியலுக்காக ட்ராமா செய்கிறாரகள். அதை பெரிதாக பொருட்படுத்த வேண்டியதில்லை.” என்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY