புதுடில்லி:டில்லி பல்கலையின் நுாறாவது பட்டமளிப்பு விழாவில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ – மாணவியருக்கு அளித்த சான்றிதழில், தாய் பெயருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருந்தது.
டில்லி பல்கலையின் நுாறாவது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ – மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
பட்டச் சான்றிதழ் 17 பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு இருந்தன. மேலும், சான்றிதழில் தாய் பெயருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருந்தது.
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், மாணவ – மாணவியருக்கு பட்டம் வழங்கி பேசும்போது, ”டில்லி பல்கலையின் பட்டச் சான்றிதழில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் புதுமை மிகவும் பாராட்டுக்குரியவை.
”சான்றிதழில் தந்தை பெயர் மட்டுமின்றி தாய் பெயரும் சேர்க்கப்பட்டு இருப்பது மிகவும் பெருமைக்குரியது. மேலும், சான்றிதழிலேயே மாணவ – மாணவியரின் போட்டோ இடம்பெற்றுள்ளது,” என்றார்.
வரலாற்றுப் பாடத்தில் ஆராய்ச்சி செய்து பிஎச்.டி., பட்டம் பெற்ற சந்தீப் ஷர்மா, ”இது, என் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம். டில்லி பல்கலையின் நுாறாவது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுவது என் கனவாக இருந்தது.
”அது இன்று நனவாகி இருக்கிறது. அதேபோல, பட்டச் சான்றிதழில் இடம்பெற்றுள்ள பாதுகாப்பு அம்சங்கள் பல்கலை எடுத்துள்ள நல்ல நடவடிக்கை. சான்றிதழின் பாதுகாப்பு மற்றும் அதன் ஆயுள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை,” என, நெகிழ்ந்தார்.
அதேபோல, மிராண்டா ஹவுஸ் கல்லுாரி ஆசிரியர் பாவான பன்சால், ”இது ஒரு சிறப்பான அனுபவம். டில்லி பல்கலையின் இந்த பாதுகாப்பு அம்சம் நிறைந்த பட்டச் சான்றிதழ் மாணவர்களுக்குப் பல வழிகளில் பயனளிக்கும்,”என்றார்.
இந்த ஆண்டு முதல், டில்லி பல்கலை சான்றிதழில் மாணவரின் கலர் போட்டோ, தாய் பெயர், கண்ணுக்கு தெரியாத மை லோகோ, பார் கோடு மற்றும் கியூ.ஆர்., குறியீடு உள்ளிட்ட 17 பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
நேற்று நடந்த விழாவில் 58,545 மாணவர்கள், 79,475 மாணவியர் உட்பட ஒரு லட்சத்து 38,020 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இதில் ஒரு லட்சத்து 30,697 பேர் இளங்கலை, 7,323 பேர் முதுகலை மற்றும் 659 பேர் பிஎச்.டி., பட்டம் பெற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்