நியூயார்க் : அமெரிக்காவில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, இந்திய இளைஞர் உயிரிழந்தார்.
இந்தியாவைச் சேர்ந்த பசில் கான், 27, என்ற இளைஞர், அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் மன்ஹாட்டன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, ‘தி ஹெச்சிங்கர் ரிப்போர்ட்’ என்ற பத்திரிகையில் பத்திரிகையாளராக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், பசில் கான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் சமீபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியது. இந்த விபத்தில் பசில் கான் உயிரிழந்தார். மேலும், 17க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர், தீயை அணைத்து காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். முதற்கட்ட விசாரணையில், லித்தியம் அயர்ன் பேட்டரி வெடித்துச் சிதறியதால், தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.
பசில் கான் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள அமெரிக்காவில் உள்ள நம் நாட்டு துாதரகம், அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்ப தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement