புதுடில்லி : தேச விரோத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து தலைமறைவான, ‘சிமி’ எனப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் முக்கிய பிரமுகர், 22 ஆண்டுகளுக்குப் பின் போலீசில் சிக்கினார்.
பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாகவும், முஸ்லிம் இளைஞர்களை துாண்டி விடுவதாகவும், சிமி அமைப்புக்கு, 2001ல் தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த அமைப்பைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தகவல்
இந்த அமைப்பு நடத்தி வந்த, ‘இஸ்லாமிக் மூவ்மென்ட்’ என்ற இதழின் உருதுமொழி பதிப்பின் ஆசிரியராக இருந்த, ஹனீப் ஷேக், 47, உள்ளிட்டோர் மீது, தேச விரோத சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஹனீப் ஷேக், பல இடங்களுக்கு மாறி மாறி சென்று தலைமறைவாக இருந்தார். அவரை டில்லி போலீசார் தேடி வந்தனர்.
ஆனால், அவர்களிடம் இருந்த ஒரே தகவல், ஹனீப் ஷேக் என்பது அவருடைய பெயர் என்பது தான். அவருடைய பெயரை வைத்து, விசாரணை நடத்தி வந்தனர்.
ஆனால், அவர் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த வழக்கில் பல தகவல்களை டில்லி போலீசார் சேகரித்து வந்தனர். அதில், இவர் மஹாராஷ்டிராவின் பூஷவால் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. மேலும், தன் பெயரை, ஹனீப் ஷேக் என்று மாற்றியதும் தெரிய வந்தது.
நிதி திரட்டல்
இவர் அங்குள்ள ஒரு உருதுமொழிப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்ததும் தெரிந்தது. இதைத் தொடர்ந்து டில்லி போலீசார், மஹாராஷ்டிராவுக்கு சென்று, சரியான நேரத்துக்காக காத்திருந்து, அவரை சமீபத்தில் கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்தபோதும், அவர், முஸ்லிம் இளைஞர்களை மதரீதியில் மனமாற்றம் செய்து, பயங்கரவாதத்தில் ஈடுபட வைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிமி இயக்கத்தில் மிகத் தீவிரமாக அவர் இயங்கி வந்ததாகவும், பல நிகழ்ச்சிகளை நடத்தியதும் தெரிய வந்துள்ளது. இதைத் தவிர, சிமி இயக்கத்துக்காக அவர் நிதி திரட்டியும் வந்துள்ளார் என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்