In West Bengal, Maharashtra… tug-of-war! The ongoing crisis in the India alliance | மேற்கு வங்கம், மஹாராஷ்டிராவில்… இழுபறி! இண்டியா கூட்டணியில் நீடிக்கும் நெருக்கடி

புதுடில்லி : ‘இண்டியா’ கூட்டணியில் இடம் பிடித்துள்ள ஆம் ஆத்மி மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுடனான தொகுதி உடன்படிக்கையை காங்கிரஸ் ஒருவழியாக சுமுகமாக முடித்துவிட்டாலும், மேற்கு வங்கம், மஹாராஷ்டிராவில் முடிவு எட்டப்படாமல் இழுபறி நீடிப்பது, காங்கிரஸ் கட்சிக்கு தலைவலியாகவே உள்ளது.

எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாதியுடன், தொகுதி பங்கீடு விவகாரத்தில் இழுபறி நீடித்து வந்தது. பலகட்ட பேச்சுக்கு பின், உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 லோக்சபா தொகுதிகளில், 17 தொகுதிகள் காங்.,குக்கு ஒதுக்கப்பட்டன. பதிலுக்கு ம.பி.,யில் ஒரு லோக்சபா தொகுதியை, சமாஜ்வாதிக்கு காங்., ஒதுக்கியது.

மற்றொரு கூட்டணி கட்சியான ஆம் ஆத்மியுடனான தொகுதி பங்கீடும் முடிவுக்கு வந்துள்ளது. பஞ்சாபில் தனித்து போட்டியிடுவது என்ற ஆம் ஆத்மியின் முடிவை காங்., ஏற்றுக் கொண்டது.

குழப்பம்

டில்லி, குஜராத், ஹரியானா, சண்டிகர் மற்றும் கோவாவில் தொகுதி பங்கீட்டில் உடன்படிக்கை எட்டப்பட்டுவிட்டது.

டில்லியில் உள்ள ஏழு லோக்சபா தொகுதிகளில் மூன்றில் காங்., போட்டியிடுகிறது.

குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் ஆம் ஆத்மிக்கு வழங்கப்பட்டன. ஹரியானாவில் காங்., எட்டு தொகுதிகளிலும், ஆம் ஆத்மி ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன. சண்டிகரில் ஒரு இடமும், கோவாவில் இரண்டு இடமும் காங்.,குக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இது ஒருபுறம் காங்கிரஸ் கட்சிக்கு நிம்மதியை அளித்தாலும், மேற்கு வங்கம் மற்றும் மஹாராஷ்டிராவில் இழுபறி இன்னும் நீடித்து வருகிறது.

மேற்கு வங்கத்தில் காங்., எட்டு தொகுதிகளை கேட்ட நிலையில், இரண்டு வேண்டுமானால் தருகிறோம் என அம்மாநில முதல்வர் மம்தா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

இதை ஏற்றுக்கொள்ள காங்., மறுத்ததை அடுத்து, ‘தேர்தலை தனியாக சந்திக்கப் போவதாகவும், தேர்தலுக்கு பின்னர் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்’ எனவும் மம்தா தெரிவித்தார்.

காங்., உடனான கூட்டணி குறித்து, திரிணமுல் காங்., தலைவர்களுக்கு இடையே குழப்பம் நீடித்து வருவதாக மேற்கு வங்க காங்., தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விமர்சித்துள்ளார்.

பின்னடைவு

மஹாராஷ்டிராவை பொறுத்தவரை, இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா மற்றும் தேசியவாத காங்., பிளவுபட்டு கிடக்கிறது. இரு கட்சிகளுமே தங்கள் கட்சிப் பெயர் மற்றும் சின்னங்களை இழந்துவிட்டன. இது, அந்த கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மேலும், மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மிலிந்த் தியோரா, அசோக் சவான் மற்றும் பாபா சித்திக் அக்கட்சியை விட்டு விலகியது, மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிராவில் 18 லோக்சபா தொகுதிகளில் போட்டியிட, சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். மும்பையில் உள்ள நான்கு முக்கிய தொகுதிகளையும் கேட்கின்றனர். இதில், காங்., சிவசேனா தாக்கரே பிரிவினர் இடையே இழுபறி நீடித்து வருகிறது.

ஒருவழியாக பேசி முடித்து தொகுதி பங்கீட்டில் உடன்படிக்கை ஏற்பட்டாலும், புதிய சின்னத்தில் போட்டியிடும் சிவசேனா உத்தவ் பிரிவு மற்றும் தேசியவாத காங்., சரத் பவார் பிரிவினருக்கு, இந்த தேர்தல் மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்றே அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.