லண்டன்: ‘மலாலாவை போல், சொந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை; இந்தியாவில் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறோம்’ என, ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் யானா மிர், பிரிட்டன் பார்லிமென்டில் உரையாற்றினார்.
தாக்குதல்
ஐரோப்பிய நாடான பிரிட்டன் பார்லிமென்டில், ‘சங்கல்ப் திவாஸ்’ என்ற நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.
இதில், ஜம்மு – காஷ்மீர் பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான யானா மிர், 32, பங்கேற்று, நம் நாட்டுக்கு எதிரான பாகிஸ்தானின் பிரசாரத்தை கண்டித்தும், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீரில் தங்களுக்கு உள்ள பாதுகாப்பு குறித்தும் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுப்சாய் மீது, அங்குள்ள பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அங்கு அவருக்கு பாதுகாப்பு இல்லாததால், அங்கிருந்து வெளியேறி, பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தார். ஆனால் நான், மலாலா யூசுப்சாய் அல்ல. ஏனெனில் என் தாய்நாடான இந்தியாவின் ஒரு அங்கமாக உள்ள ஜம்மு – காஷ்மீரில் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறேன்.
நான் ஒருபோதும் வேறு நாட்டில் அடைக்கலம் தேட வேண்டிய அவசியம் இல்லை. காஷ்மீரில் அடக்குமுறை நிகழ்வதாக கூறும் மலாலாவின் அவதுாறு கருத்துகளை எதிர்க்கிறேன்.
அடக்குமுறை
சமூக வலைதளங்கள் மற்றும் சர்வதேச ஊடகங்களில் பரப்பப்படும் இதுபோன்ற அனைத்து அவதுாறுகளையும் ஆட்சேபிக்கிறேன்.
காஷ்மீரில் அடக்குமுறைகள் நிகழ்வதாக கதைகளை உருவாக்குகின்றனர். மதத்தின் அடிப்படையில் இந்தியர்களிடையே பிரிவினை ஏற்படுத்துவதை நிறுத்தும்படி வேண்டுகிறேன்.
எங்களிடையே பிளவை ஏற்படுத்த அனுமதிக்க மாட்டோம்.
பிரிட்டனில் அமர்ந்தவாறு, இந்திய சமூகத்தை பிளவுபடுத்த முயற்சிப்பதை நிறுத்துங்கள். பயங்கரவாதத்தால் ஆயிரக்கணக்கான காஷ்மீர் தாய்மார்கள் ஏற்கனவே தங்கள் மகன்களை இழந்துள்ளனர். என் காஷ்மீரி சமூகத்தை நிம்மதியாக வாழ விடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்