கர்நாடக மாநிலம், பெங்களூருவில், கே.ஆர் புரம் பகுதியில் 70 வயது மூதாட்டி ஒருவர் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டியின் பெயர் சுசீலாம்மா என்று தெரியவந்திருக்கிறது. இவர், கே.ஆர் புரத்தில் நிசர்கா லேஅவுட் அருகே உள்ள வாடகை வீட்டில் தன்னுடைய மகளுடன் வசித்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக இவர் காணாமல்போனதாகத் தெரிகிறது. இவ்வாறிருக்க, கே.ஆர் புரம் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத வீட்டின் அருகே துர்நாற்றம் வீசியதையடுத்து, அப்பகுதி மக்கள் போலீஸிடம் தகவல் தெரிவித்தனர்.
அதையடுத்து, சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்து பார்த்தபோது, ஒரு டிரம்மில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் சுசீலாம்மாவின் உடல் இருந்திருக்கிறது. பின்னர், அங்கிருந்து அந்த உடலை போலீஸார் மீட்டனர்.

இது குறித்துப் பேசிய கிழக்கு கூடுதல் ஆணையர் ராமன் குப்தா, “பாதிக்கப்பட்டவர் தன் மகள் மற்றும் 2, 3 உறவினர்களுடன் வசித்து வந்தார். அவரின் உறவினர்கள் அனைவரும் அருகிலேயே வசித்துவந்தனர். இந்த சம்பவம் நேற்று நடந்திருக்கலாம். தேவையான அனைத்து விசாரணைகளும் எங்கள் அதிகாரிகளால் நடத்தப்படும். தீவிரமாக விசாரணையைத் தொடர்கிறோம், மேலும் குற்றவாளிகளை விரைவில் பிடிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.