ஆந்திர மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது. இம்முறை தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து களத்தில் இறங்குகிறது.
கடந்த 2 தேர்தலில் படு தோல்வியை சந்தித்த காங்கிரஸ் கட்சி இம்முறை ஷர்மிளாவின் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணியோடு களம் காண திட்டமிட்டுள்ளது. ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி இம்முறையும் தனித்து போட்டியிடுமா, அல்லது பாஜகவுடன் கூட்டணி அமைத்து களம் இறஙகுமா என்பது கேள்விக் குறியாக உள்ளது. இதனால், பாஜகவின் நிலை என்ன என்பது தற்போது பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.
இந்நிலையில், நேற்று அமராவதியில் சந்திர பாபு நாயுடுவின் வீட்டில், ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடு மற்றும் இரு கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளின் முன்னிலையில் 2024 ஆந்திர சட்டப்பேரவை தேர்தலின் முதற்கட்ட கூட்டணி வேட்பாளர் பட்டியலை இரு கட்சி தலைவர்களும் வெளியிட்டனர். ஆந்திராவில் உள்ள மொத்தம் 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 24 சட்டப்பேரவை தொகுதிகளும், 25 நாடாளுமன்ற தொகுதிகளில் 3 ஜனசேனாவுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் முதற்கட்டமாக நேற்று தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 94 வேட்பாளர்களும், ஜனசேனா கட்சியை சேர்ந்த 5 சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர்கள் பெயர் பட்டியலை இருவரும் வெளியிட்டனர். ஒருவேளை பாஜக இவர்களின் கூட்டணிக்கு வந்தால், அவர்களுக்கு சில தொகுதிகள் ஒதுக்கப்படுமென சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். இந்த முதற்கட்ட பட்டியலில் குப்பம் தொகுதியிலிருந்து சந்திரபாபு நாயுடு, இந்துப்பூர் தொகுதியில் இருந்து நடிகர் பால கிருஷ்ணா, மங்களகிரி தொகுதியில் இருந்து சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் உள்ளிட்டோர் போட்டியிட உள்ளனர்.
வேட்பாளர்கள் அனைவரும் நன்கு படித்தவர்கள். பிரத்திபாடு தொகுதியில் போட்டியிடும் ராமாஞ்சனேயுலு எனும் வேட்பாளர் ஐஏஎஸ் பயிற்சி பெற்றவர். மேலும், 3 பேர் டாக்டர்கள் மற்றும் 2 பேர் டாக்டரேட் பட்டம் பெற்றவர்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்த 99 பேரில் 13 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர்.