ராஞ்சி: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டி முடிவில், இந்திய அணி 2–1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் ஜார்க்கண்ட்டில் உள்ள ராஞ்சியில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 353 ரன் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து 46 ரன் மட்டுமே முன்னிலை பெற முடிந்தது.
பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி, இந்திய ‘சுழல்’ புயலில் சிக்கியது. இங்கிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற 145 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5, குல்தீப் 4 விக்கெட்கள் வீழ்த்தினர். இதனையடுத்து இந்தியாவுக்கு 192 ரன்னை வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் வலுவான அடித்தளம் அமைத்தனர். மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 40 ரன் எடுத்திருந்தது.
தொடரை வென்றது
வெற்றிக்கு இன்னும் 152 ரன் மட்டுமே தேவை என்ற நிலையில், 4வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ரோகித் அரைசதம் கடந்து 55 ரன்னில் வெளியேறினார். ஜெயஸ்வால் (37), ரஜத் படிதர் (0), ஜடேஜா (4), சர்பராஸ் கான் (4) அடுத்தடுத்து அவுட்டாக இந்திய அணிக்கு கொஞ்சம் நெருக்கடி ஏற்பட்டது. பின்னர் இணைந்த சுப்மன் கில், துருவ் ஜூரல் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது. முடிவில் இந்திய அணி 192 ரன்கள் இலக்கை அடைந்து 5 விக்., வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. சுப்மன் கில் (52), துருவ் ஜூரல் (39) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. 5வது மார்ச் 7ல் நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement