‘இத்தகைய சம்பவம் இனி நடக்கக் கூடாது; அரசு அதை உறுதி செய்ய வேண்டும்’ – ராமேஸ்வரம் கஃபே சிஇஓ

பெங்களூரு: கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 1) அன்று பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் குண்டுவெடித்தது. இந்த குற்ற செயலை அரங்கேற்றிய நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த சூழலில் ராமேஸ்வரம் கஃபேவின் சிஇஓ ராகவேந்திர ராவ் தெரிவித்ததாவது..

“வெடிகுண்டு வெடித்த காரணத்தால் காயமடைந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உறுதுணையாக நாங்கள் இருக்கிறோம். அவர்களது குடும்பத்துக்கும் இந்நேரத்தில் நாங்கள் ஆதரவாக இருப்போம் என தெரிவித்துக் கொள்கிறோம். இளைஞர்களின் சக்தி என்ன என்பதை வெளிக்காட்டவும், இந்தியர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை உரக்க சொல்லவும் உங்களது ஆசி எங்களுக்கு இந்த நேரத்தில் தேவை.

வரும் வெள்ளிக்கிழமை முதல் நாங்கள் எங்கள் இயக்கத்தை தொடர உள்ளோம். உங்களது ஆதரவு வேண்டும். இந்தியாவில் இத்தகைய சம்பவம் இனி எங்கும் நடக்கக் கூடாது என்பதை மாநில மற்றும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என அவர் தெரிவித்தார்.

பெங்களூருவில் பன்னாட்டு நிறுவனங்கள் நிறைந்துள்ள‌ ஒயிட் பீல்டில் ‘ராமேஸ்வரம் கஃபே’ என்ற உணவகம் இயங்கி வருகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் மசாலா தோசைக்காக தினமும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் குவிவார்கள். இந்நிலையில் மார்ச் 1-ம் தேதி அன்று பிற்பகல் 1 மணியளவில் திடீரென பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. தொடர்ந்து காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குண்டுவெடிப்பு என்பதை கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது. அதோடு இதில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம் என்றும், விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என்றும் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.