திருவனந்தபுரம் : தமிழகத்தின் கடலுார் மாவட்டம் வடக்கு மூளியூரைச் சேர்ந்தவர் மணிகண்டன். மனைவி ஸ்ரீபிரியா, 19. இவர்களுக்கு, 11 மாதத்தில் கலையரசன் என்ற ஆண் குழந்தை இருந்தது.
இந்நிலையில் ஸ்ரீ பிரியாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜெயசூர்யா, 23, என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன் ஸ்ரீபிரியா தன் குழந்தையுடன் மாயமானார்.
இந்நிலையில் கேரள மாநிலம் மலப்புரம் அருகே திரூர் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் ஜெயசூர்யா, அவரது தந்தை குமார், தாய் உஷா ஆகியோருடன் ஸ்ரீபிரியா வசித்து வந்துள்ளார்.
அப்போது உறவினர் சிலம்பரசன் என்பவர் ஸ்ரீபிரியாவை திடீரென பார்த்து, குழந்தையை பற்றி விசாரித்துள்ளார்.
சந்தேகமடைந்த சிலம்பரசன் போலீசில் புகார் செய்தார். விசாரணையில், கள்ளக்காதலுக்கு குழந்தை இடையூறாக இருந்ததால், இரண்டு மாதத்துக்கு முன் கொலை செய்து, திருச்சூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஓடையில் வீசியதாக தெரிவித்தனர். ஓடையிலிருந்து அழுகிய நிலையில் குழந்தையின் உடல் மீட்கப்பட்டது.
ஜெயசூர்யா, ஸ்ரீபிரியா ஆகியோரை கைது செய்த போலீசார், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக ஜெயசூர்யாவின் தந்தை குமார், தாய் உஷா ஆகியோரையும் கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement