புதுடில்லி : தனியார் துறையைச் சேர்ந்த 25 நிபுணர்களை, உயர் பதவிகளில் நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது.
இரண்டு முறை தொடர்ந்து வெற்றி பெற்ற பா.ஜ., ஹாட்ரிக் வெற்றியை குறிவைத்து, நடக்கவுள்ள லோக்சபா தேர்தலை எதிர்நோக்கிஉள்ளது.
ஒப்புதல்
இந்நிலையில், இணைச் செயலர்கள், துணைச் செயலர்கள், இயக்குனர்கள் என மத்திய அமைச்சகங்களின் நிர்வாக உயர் பதவிகளில், தனியார் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை நியமிக்க உரிய ஏற்பாடுகளை பா.ஜ., அரசு செய்து வருகிறது.
இதன் வாயிலாக, நிர்வாக ரீதியாகவும், தொழில்நுட்ப வகையிலும் சிறந்து விளங்கும் தனியார் துறையைச் சேர்ந்த 25 நிபுணர்கள், மத்திய அரசின் பல்வேறு நிர்வாக பொறுப்புகளில் நியமிக்கப்பட உள்ளனர்.
இதற்காக, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் மூன்று இணைச் செயலர்கள், 22 இயக்குனர்கள் மற்றும் துணைச் செயலர்களை நியமிக்க மத்திய அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட அகில இந்திய குடிமைப் பணியின் ‘குரூப் – ஏ’ சேவையில் இருந்து இந்த பணியிடங்கள் நியமிக்கப்படுவது வழக்கம்.
இருப்பினும், கடந்த 2018 முதல் ‘லேட்டரல் என்ட்ரி’ எனப்படும் நடைமுறை வாயிலாக தனியார் துறையைச் சேர்ந்த நிபுணர்கள், மத்திய அரசின் உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
அரசின் கொள்கைகளை வகுப்பதில், வழக்கமான ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை விட, ஆட்சியாளர்களுக்கு இணக்கமானவற்றை இவர்கள் சரிவர செய்து முடிப்பர் என நம்பப்படுகிறது.
நிர்வாக பணியில் தனியார் துறையில் கற்று தேர்ந்த அனுபவங்களின் அடிப்படையில் அரசு நிர்வாகத்தில் அவர்கள் சரியான முடிவுகளை எடுப்பர் என்பதால், இந்த முறையை பா.ஜ., அரசு பின்பற்றி வருகிறது.
லேட்டரல் என்ட்ரி முறை
கடந்த 2018 ஜூனில், மத்திய பணியாளர் அமைச்சகம், 10 இணைச் செயலர் பதவிகளுக்கான விண்ணப்பங்களை லேட்டரல் என்ட்ரி முறை வாயிலாகவே பெற்றது.
இந்த பணிகளுக்கான ஆட்சேர்ப்பு யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் வாயிலாக நடத்தப்பட்டது.
இதையடுத்து, கடந்த 2021 அக்டோபரில், இதே முறையில் உயர் பதவியில் உள்ள 38 பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
இந்த திட்டத்தின் வாயிலாக எட்டு இணைச் செயலர்கள், 16 இயக்குனர்கள் மற்றும் ஒன்பது துணைச் செயலர்கள் தற்போது முக்கிய அரசுத் துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும் இரண்டு இணைச் செயலர்கள் தங்கள் முழு மூன்றாண்டு பதவிக்காலத்தையும் முடித்துள்ளனர்.
இந்த நடைமுறை வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளின் சிறப்பான பணியால், நிர்வாகம் சீரிய முறையில் நடப்பதால், மீண்டும் புதிதாக 25 பேரை தனியார் துறையில் இருந்து நியமிக்க, பா.ஜ., அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்