வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : ”நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ற, 1,000 புதிய அம்ரித் பாரத் ரயில்களை, வரும் ஆண்டுகளில் இந்தியா தயாரிக்கும். மேலும், மணிக்கு 250 கி.மீ., வேகத்தில் இயங்கக்கூடிய ரயில்களை தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது,” என, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டில்லியில், பா.ஜ.,வைச் சேர்ந்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று கூறியதாவது:
‘வந்தே பாரத்’ ரயில்களை ஏற்றுமதி செய்வதற்கான பணிகளை, ரயில்வே ஏற்கனவே துவங்கி உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டு களில் வந்தே பாரத் ரயிலின் ஏற்றுமதி நடக்கும். பிரதமர் மோடி தலைமையிலான, 10 ஆண்டு கால ஆட்சியில், ஜம்மு – காஷ்மீரின் ரியாசில், உலகின் மிக உயரமான, செனாப் ரயில்வே பாலம் மற்றும் மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் முதன்முறையாக நதிக்கு அடியில் ரயில்வே பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ற அம்ரித் பாரத் ரயிலை, உலகத்தரம் வாய்ந்த ரயிலாக வடிவமைத்துள்ளோம்.
இது, 454 ரூபாயில், 1,000 கி.மீ., துார பயணத்தை வழங்குகிறது. வரும் ஆண்டுகளில், 1,000 புதிய அமிர்த் பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும். மேலும், மணிக்கு 250 கி.மீ., வேகத்தில் இயங்கக் கூடிய ரயில்களை தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில், பயணியரின் பாதுகாப்பிற்காக, 1.27 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 7,000 கி.மீ., தொலைவுக்கு பழுதடைந்த பாதைகள் மாற்றப்படுகின்றன. ரயில்வேயை பொறுத்தவரை குறைந்த வருமானம் உடைய குடும்பங்கள் பயனடைவது தான் நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement