கிருஷ்ணகிரி: ஓசூர் அரசு தலைமை மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்பால் விற்பனை செய்யும் அவலத்தை தடுத்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு தலைமை மருத்துவமனையில் 325 படுக்கைகள் உள்ளன. 56 செவிலியர்கள், 26 மருத்துவர்கள் பணிபுரிகின்றனர். மேலும், இந்த மருத்துவமனைக்கு தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பெட்டமுகிலாம், கெலமங்கலம், உரிகம், தளி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், ஓசூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் என தினமும் 1000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
அதேபோல் தினமும் 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்க்காக வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பெரும்பாலும் பொருளாதரத்தில் பின் தங்கிய மலைகிராமப்பகுதிகளை சேர்ந்தவர்கள். ஓசூரில் உள்ள தொழிற்சாலைகளில் குறைந்த சம்பளத்திற்கு பணிபுரியும் தொழிலாளர்களும் இங்கே வந்து சிகிச்சைபெற்று செல்கின்றனர்.
குறிப்பாக, பிரசவ வார்டில் உள்ள தாய்மார்களுக்கு பால்சுரப்பது குறைவாக இருந்தாலோ, பால் சுரக்கவில்லை என்றால், அவசர சிகிச்சை பிரிவில் உள்ள அதிக பால் சுரக்கும் தாய்மார்களிடமிருந்து, செவிலியர்கள் பால் சுரந்து பச்சிளம் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்குவது வழக்கம். ஆனால், ஓசூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் உதவியாளர்கள் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள தாய்மார்களிடமிருந்து, பாலை சுரந்து, பால் சுரக்காத தாய்மார்களின் குழந்தைகளுக்கு வழங்குவதற்கு ரூ.400 வரை கட்டாய வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து ஓசூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறும் போது, “ஓசூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு மலைகிராமம், கிராமப்பகுதியை சேர்ந்த ஏழை எளிய மக்கள் பல்வேறு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஆனால் அங்கு அவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள் இல்லை. அதேபோல் நோயாளிகளிடம் அங்கு பணிபுரியும், ஊழியர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்கின்றனர்.
பிரசவம் முடிந்து வீட்டிற்கு செல்லும் போது, ஆண் குழந்தை பிறந்தால், ரூ.2 ஆயிரம், பெண் குழந்தை பிறந்தால் ரூ.1000 என கட்டாய வசூல் செய்யும் அவலம் தொடர்கிறது. அதே போல் பிரசவ வார்டில் பால் சுரக்காத தாய்மார்களின் குழந்தைகளுக்கு, அதிக பால் சுரக்கும் தாய்மார்களிடமிருந்து பாலை வாங்கி செல்லும் ஊழியர்கள் அந்த பாலை பச்சிளம் குழந்தைகளுக்கு ரூ.400 வரை விற்பனை செய்யும் சம்பவம் தற்போது அதிகரித்துள்ளது.
சில தினங்களுக்கு முன் ஓசூர் அரசு தலைமை மருத்துவமனையில் 2 மருத்துவ உதவியாளர்கள் தாய்பாலை விற்பனை செய்ததாக விசாரணை நடந்தது. ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இது போன்று தாய் பால் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஓசூர் அரசு மருத்துவமனையில் அரசு சார்பில் தாய்பால் வங்கி தொடங்க வேண்டும். மேலும் இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்க வேண்டும்” என கூறினர்
இது குறித்து மருத்துவ அலுவலர் சிலர் கூறும் போது, “ஓசூர் அரசு மருத்துவமைனையில் தாய் பால் விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார் வந்தது. அதன் பேரில் மருத்துவ அலுவலர்கள் வந்து விசாரணை செய்ததில், அங்கு பணிபுரியும் வாசுகி. எல்லம்மாள் என்கிற 2 பெண் ஊழியர்கள் தாய்பால் விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது.
தாய்ப்பால் விற்பனை செய்வது தவறு, இதனால் அந்த 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க மருத்துவத் துறை அதிகாரிகளிடம் விசாரணை அறிக்கை அனுப்பி உள்ளனர். அதேபோல் மருத்துவமனையில் பால் விற்பனை செய்வது குறித்து தெரிவி்க்க புகார் எண் வழங்கப்பட்டுள்ளது. ஓசூர் அரசு மருத்துவமனையில் தாய் பால் வங்கி தொடங்கிட எங்களுக்கு மேல் உள்ள அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்