புதுடெல்லி: பிஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள மூத்த தலைவருமான லாலு பிரசாத் யாதவ் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியபோது பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோரை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். குறிப்பாக, பிரதமர் மோடியை ‘குடும்பம் அற்றவர்’ என்று விமர்சித்திருந்தார். இதனையடுத்து, இன்று (திங்கள்கிழமை) பாஜகவின் முக்கியத் தலைவர்கள் பலரும் தங்களின் சமூக வலைதளப் பக்கங்களின் சுயவிவரத்தில் ‘மோடியின் குடும்பம்’ என்பதைச் சேர்த்துள்ளனர்.
லாலு என்ன பேசியிருந்தார்? – முன்னதாக இண்டியா கூட்டணி சார்பில் பாட்னாவில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் லாலு பிரசாத் யாதவ் பேசியிருந்தார். அப்போது அவர், “பிரதமர் எப்போதும் ராமர் கோயில் பற்றி பெருமை பேசுகிறார். ஆனால், அவரே முழு இந்து அல்ல. ஓர் இந்து ஆண் அவரது பெற்றோர் மறைந்தால் தாடி, தலைமுடியை சவரம் செய்து கொள்ள வேண்டும். ஆனால், பிரதமர் மோடி அவரது தாயாரின் மறைவின்போது அவ்வாறாக ஏதும் செய்யவில்லை.
அதுமட்டுமல்ல… ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் மீதும் குடும்ப அரசியல் குற்றச்சாட்டை எழுப்பி வருகிறார் பிரதமர் மோடி. குடும்ப ஆட்சி என்று நரேந்திர மோடி தாக்கி வருகிறார். உங்களுக்கு குழந்தைகளோ, குடும்பமோ ஏன் இல்லை என்பதை நீங்கள் (மோடி) சொல்ல வேண்டும்? பல குடும்பங்கள் அரசியலில் இருந்தால் அது குடும்ப ஆட்சியா? அது வாரிசு அரசியலா? உங்களுக்கு (மோடிக்கு) குடும்பம் இல்லையென்றால் யார் என்ன செய்ய இயலும்?” என்று லாலு பேசியிருந்தார்.
பாஜக எதிர்வினை: லாலு பிரசாத் யாதவின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்திருந்தன. பிஹார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா, “லாலு பிரசாத் யாதவின் கருத்துகள் மரியாதைக் குறைவானது, தாக்குதல் தொனியில் கூறப்பட்டுள்ளது. அவரது பேச்சு அவர் மனப்பாங்கை பிரதிபலிக்கிறது. ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியினர் சனாதன தர்மத்துக்கு எதிரானவர்கள். அவர்கள் நம் தேசத்தில் நூற்றாண்டு பாரம்பரியத்தை சிதைக்கின்றனர். அரசியல் கோமாளிகள் போல் நடந்து கொள்கின்றனர். இத்தகைய சக்திகளை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடியை விமர்சித்ததற்கு எதிர்வினையாக பாஜக தேசியத் தலைவர் தொடங்கி அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்கள் என பலரும் சமூக ஊடக சுயவிவரத்தில் ‘மோடியின் குடும்பம் – Modi ka parivar’ என்ற வார்த்தைகளை தங்கள் பயோவில் பெயருக்குப் பின்னால் இணைத்துள்ளனர். அமித் ஷா, நட்டா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, தர்மேந்திர பிரதான், அனுராக் தாக்குர், முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் ‘மோடியின் குடும்பம்’ வார்த்தையை இணைத்துள்ளனர்.
மோடி பதிலடி: இதனிடையே, தெலங்கானாவின் அடிலாபாத் நகரில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “நான் குடும்ப ஆட்சி என்ற கூறுவதை வைத்து மோடிக்கு குடும்பமே இல்லை என்று இண்டியா கூட்டணி தலைவர்கள் பேசுகிறார்கள். எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். நாட்டு மக்கள் 140 கோடி பேரும் எனது குடும்பத்தினர்தான். கோடிக்கணக்கான மகள்கள், அம்மாக்கள், சகோதரிகள் அனைவரும் மோடியின் குடும்பத்தவர்கள்தான்” என்று பேசினார். முழுமையாக வாசிக்க > “140 கோடி மக்களும் எனது குடும்பத்தினரே!” – லாலுவின் கிண்டலுக்கு பிரதமர் மோடி பதிலடி
2019-ஐ போலவே… – கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது ‘நானும் காவலாளிதான்’ (Main bhi chowkidar) என்ற வார்த்தைகளை பாஜகவினர் தங்களின் சமூக ஊடக பக்கங்களில் இணைத்துக் கொண்டனர். “ஊழல் மற்றும் சமூகக் கொடுமைகளுக்கு எதிரான போரில் நான் தனி ஆள் இல்லை” என்று கூறியதோடு தனது ஆதரவாளர்கள் அனைவரும் ‘நானும் காவலாளிதான்’ என உறுதிமொழி ஏற்கவேண்டும் என கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவ்வாறு இணைத்திருந்தனர். அதே பாணியில் இப்போது ’மோடியின் குடும்பம்’ வார்த்தைகள் இணைக்கப்பட்டு வருகிறது.