இந்தூர்: பாஜகவின் சிட்டிங் எம்.பி.யான சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் பாஜக வெளியிட்ட 195 வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக போபால் தொகுதிக்கு முன்னாள் மேயர் அலோக் சர்மாவுக்கு சீட் கொடுத்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து சாத்வி பிரய்கா கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: நான் பேசிய வார்த்தைகளுக்கு மன்னிக்கப்பட மாட்டேன் என்று ஏற்கெனவே பிரதமர் மோடி சொல்லியிருந்தார்.
“கடந்த முறை நான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கோரவில்லை. இந்த முறையும் நான் எதிர்பார்க்கவில்லை. நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் பிரதமர் மோடிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம். அவர் அதனைத் தெரிவித்தும் இருந்தார். நான் சொன்ன வார்த்தைகளுக்கு மன்னிகப்பட மாட்டேன் எனக் கூறியிருந்தார். இருப்பினும் நான் அவரிடம் மன்னிப்பு கோரியிருந்தேன்.” என்று ஊடகப் பேட்டி ஒன்றில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
மாலேகான் குண்டு வெடிப்பு: மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் முஸ்லிம் மக்கள் நிறைந்த பகுதியில் கடந்த 2008, செப்டம்பர் 29-ம் தேதி நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர்.
சம்பவம் தொடர்பாக இந்து அமைப்பை சேர்ந்த சாத்வி பிரக்யா சிங் தாக்கூரை மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர். குண்டுவெடிப்பு நிகழ்த்த பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் சாத்விக்கு சொந்தமானது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் சாத்வி பிரக்யா போபால் தொகுதியில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றார். இருப்பினும் அவருடைய சர்ச்சைப் பேச்சுக்கள் அவருக்கு தொடர் சறுக்கலை ஏற்படுத்தின.
சாத்வி பிரக்யா சர்ச்சை கருத்துகளுக்கு பெயர் போனவர் பலமுறை பல்வேறு கருத்துகளால் சர்ச்சையைக் கிளப்பியிருந்தாலும் மும்பை தாக்குதல் பற்றி இவரது கருத்து ஒன்று பெரும் எதிர்ப்பலைகளை சம்பாதித்தது. 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலை எதிர்த்துப் போராடி சண்டையிட்டு அதில் வீர மரணம் அடைந்த தியாகி போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரேவின் மரணத்துக்கு தன் சாபமே காரணம் என்று அவர் கூறியிருந்தார்.
“இந்த ஹேமந்த் கர்காரேதான் என்னை தவறாக குற்றவாளியாக்கினார். நான் அப்போதே அவரிடம் கூறினேன், நீங்கள் அழிந்து போவீர்கள் என்று. அவரது பரம்பரையே அழிக்கப்படும் என்று சாபமிட்டேன், அதுதான் 26/11 தாக்குதலில் அவரது மரணத்திற்குக் காரணமாகும்” என்று அவர் பேசியது கடும் எதிர்ப்பை ஈட்டியது.
இந்நிலையில் அவருக்கு இந்த முறை சீட் மறுக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல்: வரும் ஏப்ரலில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர்களை இறுதி செய்வது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 29-ம் தேதி இரவு டெல்லியில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பின்னிரவு வரை நடந்த இந்த கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது.
28 பேர் பெண்கள்:இதைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதல் பட்டியலை கட்சி தலைமை அண்மையில் வெளியிட்டது. பாஜக பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே டெல்லியில் பட்டியலை வெளியிட்டார்.
இதில் 195 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அவர்களில் 28 பேர் பெண்கள், 47 பேர் இளைஞர்கள், 27 பேர் எஸ்சி, 18 பேர் எஸ்டி, 57 பேர் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
உத்தர பிரதேசத்தில் 51, மேற்குவங்கத்தில் 20, மத்திய பிரதேசத்தில் 24, குஜராத்தில் 15, ராஜஸ்தானில் 15, கேரளாவில் 12, சத்தீஸ்கரில் 11, தெலங்கானாவில் 9, அசாமில் 11, டெல்லியில் 5, ஜம்மு காஷ்மீரில் 2, உத்தராகண்டில் 3, அருணாச்சல பிரதேசத்தில் 2, கோவாவில் 1, திரிபுராவில் 1, அந்தமானில் 1, டையூ-டாமனில் 1 தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தின் வாராணசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.