`பெண்களுக்கு பாதுகாப்பற்றதா இந்தியா?' – அமெரிக்க பத்திரிகையாளர் பதிவுக்கு NCW தலைவர் கண்டனம்..!

ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு, தன் கணவருடன் சுற்றுலா வந்திருந்த ஸ்பெயின் நாட்டு பெண் இரண்டு நாள்களுக்கு முன்பு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அப்பெண் தன் கணவருடன் தற்காலிக குடில் ஒன்றில் தங்கி இருந்தபோது இச்சம்பவம் நடந்தது.

இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க பத்திரிகையாளர் டேவிட் ஜோசப் தன் சோஷியல் மீடியா பதிவில், தன் பெண் நண்பர்கள் தனியாக இந்தியா செல்வதை தவிர்க்கும்படி எச்சரித்து இருந்தார். பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் சம்பவங்கள் இந்தியாவில் அதிகம் நடப்பதை தன் இந்திய பயண அனுபவத்தில் பார்த்ததாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இந்தப் பதிவுக்கு, தேசிய பெண்கள் கமிஷன் தலைவர் ரேகா சர்மா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘நீங்கள் இந்தியா வந்தபோது நடந்ததாகக் குறிப்பிட்டிருக்கும், பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளான சம்பவங்கள் குறித்து போலீஸில் தெரிவித்தீர்களா? அப்படி தெரிவிக்கவில்லை எனில், உங்களை போன்ற பொறுப்பற்ற ஒருவர் வேறு யாரும் இருக்க முடியாது. சோஷியல் மீடியாவில் மட்டும் எழுதி இந்தியாவை களங்கப்படுத்துவது நல்லதல்ல’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள டேவிட், ‘பெண்கள் பொது இடத்தில் நிர்வாணப்படுத்தப்படுவது, அடிப்பது மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவது போன்ற பிரச்னைகளை தீர்க்கவில்லையென்று உங்கள் (ரேகா) மீதே விமர்சனம் எழுந்தது. ஆனால், நாங்கள் இந்தியாவை களங்கப்படுத்துவதாக என் மீது குற்றம் சுமத்துகிறீர்கள். நான் இந்தியாவை களங்கப்படுத்துவதாக கூறுவது முற்றிலும் தவறு. நான் இந்தியாவை நேசிக்கிறேன். உலகில் எனக்குப் பிடித்த இடம் இந்தியா. தேசிய பெண்கள் கமிஷன் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு எதையும் செய்யாமல் இருக்கும் நீங்கள்தான் இந்தியாவை களங்கப்படுத்துகிறீர்கள். நாங்கள் இது குறித்து மக்களின் கவனத்திற்கு கொண்டு வந்தால் எங்களைப் போன்றவர்களை விமர்சனம் செய்கிறீர்கள்’ என்று பதிலளித்துள்ளார்.

இதற்கு தன் பதிவில் பதிலளித்துள்ள ரேகா சர்மா, ’ஒட்டுமொத்த நாட்டை மோசமாக சித்திரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தச் சம்பவம் கண்டிக்கப்பட வேண்டியது. குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியதும் அவசியம் என்பதால், சில புள்ளி விவரங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவிற்கு வெளிநாட்டில் இருந்து 60 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்களில் தனியாக வரும் பெண்களும் அதிகமாக இருக்கின்றனர். அவர்கள் விடுமுறையை பாதுகாப்புடன் செலவிடுகின்றனர். உங்களது சமூக வலைதள பதிவை நீக்கவும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.