புதுடில்லி,
பார்லிமென்ட் அல்லது சட்டசபையில் பேசுவதற்கும், ஓட்டளிப்பதற்கும் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுகளில், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களுக்கு சட்ட பாதுகாப்பு கிடையாது என, உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இது தொடர்பாக, 25 ஆண்டுகளுக்கு முன் அளிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்துள்ளது.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி இருந்தபோது, 1993ல் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவுக்கு எதிராக பார்லிமென்டில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஐந்து எம்.பி.,க்கள் ஆதரவு அளித்ததால், நரசிம்ம ராவ் அரசு தப்பியது.
அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரன் மற்றும் அக்கட்சியின் நான்கு எம்.பி.,க்கள் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக, அவர்கள் மீது, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமர்வு, 1998ல் தீர்ப்பு அளித்தது.
சட்ட நடவடிக்கை
சட்டசபை அல்லது பார்லிமென்டில் பேசுவதற்கு அல்லது ஓட்டளிப்பதற்கு லஞ்சம் வாங்கியதாக, எம்.பி., அல்லது எம்.எல்.ஏ.,க்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது.
அரசியலமைப்பு சட்டத்தின், 105 மற்றும் 194 பிரிவின்படி, அவர்களுக்கு சட்ட பாதுகாப்பு உள்ளது என, அந்த தீர்ப்பில் கூறப்பட்டது.
இதற்கிடையே, 2012ல் நடந்த ராஜ்யசபா தேர்தலின்போது, ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஓட்டளிக்க, ஜார்க்கண்ட் எம்.எல்.ஏ.,வாக இருந்த, சிபுசோரனின் மருமகள் சீதா சோரன் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரித்த, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம், 2014ல் அளித்த உத்தரவில், அவர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்தது.
இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தன் மாமனார் சிபு சோரன் தொடர்புடைய வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி, தனக்கும் சட்ட பாதுகாப்பு உள்ளதாக சீதா சோரன் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. கடந்தாண்டு, அக்டோபரில் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது.
தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான, ஏழு நீதிபதிகள் அமர்வு, நேற்று ஒருமித்த தீர்ப்பை அளித்தது.
சிறப்புரிமை
அதில், சட்டசபை மற்றும் பார்லிமென்டில் பேசுவதற்கு அல்லது ஓட்டளிப்பதற்கு லஞ்சம் வாங்கும் குற்றச்சாட்டுகளில், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க முடியாது என, தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ், பி.எஸ். நரசிம்மா, ஜே.பி. பர்த்தவாலா, சஞ்சய் குமார், மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்துள்ள தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில் பேசுவதற்கும், ஓட்டளிப்பதற்கும் லஞ்சம் வாங்குவது, பொது வாழ்க்கையில் நேர்மையை சீர்குலைப்பதாகும். லஞ்சம் என்பதை, பார்லிமென்ட் சிறப்புரிமை பாதுகாக்கவில்லை.
அரசியலமைப்பு சட்டத்தின், 105 மற்றும் 194வது பிரிவுகள் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு சிறப்புரிமையும், அதிகாரமும் அளிக்கிறது.
அரசியலமைப்பு சட்டத்தின், 105வது பிரிவு, பார்லிமென்டில் உறுப்பினர்கள் விவாதங்கள் நடத்துவதற்கான இணக்கமான சூழ்நிலையை உருவாக்குவதை உறுதி செய்கிறது. பார்லிமென்டில் பேசுவதற்கு லஞ்சம் வாங்கும்போது, இது முறியடிக்கப்படுகிறது.
சபை ஒருங்கிணைந்து செயல்படுவதற்காகவே, இந்த சிறப்புரிமை வழங்கப்படுகிறது. அது ஒரு எம்.பி., அல்லது எம்.எல்.ஏ., சிறப்பாக செயல்படுவதற்காக வழங்கப்படுகிறது.
சபையின் மாண்பு, அரசியலில் நேர்மை ஆகியவற்றை மீறும்போது, எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள், சட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கு கேட்கும் உரிமையை இழந்து விடுகின்றனர். இது தொடர்பாக, 1998ல் அளிக்கப்பட்ட தீர்ப்பு, அரசியலமைப்பு சட்டத்தின் 105 மற்றும் 194 பிரிவுக்கு முரணாக உள்ளது.
இவ்வாறு அமர்வு தீர்ப்பில் கூறியுள்ளது.
வரவேற்கிறேன்!
ஸ்வாகதம் — வரவேற்கிறேன். உச்ச நீதிமன்றத்தின் மிகச் சிறப்பான தீர்ப்பு, அரசியலில் துாய்மையை ஏற்படுத்துவதுடன், ஆட்சியின் மீது மக்களுடைய நம்பிக்கையை ஆழப்படுத்தும்.
நரேந்திர மோடி, பிரதமர்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்