காங்கிரஸ் 30 – 40 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது: அசாம் முதல்வர் கருத்து

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 30 – 40 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற வேண்டும் (இந்திய கிரிக்கெட் அணி உறுப்பினர்களைப் போல்) என்பதுதான் எனது விருப்பம். ஆனால், அது நிகழாது. ஆனால், காங்கிரஸ் கட்சி 30 – 40 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது. அந்தக் கட்சி ஏற்கெனவே பிராந்திய கட்சியாக மாறிவிட்டது. அந்தக் கட்சியில் பல ஆண்டுகள் இருந்த அனுபவத்தில் கூறுகிறேன், பல மாநிலங்களில் பிராந்திய காங்கிரஸ் கட்சிகள் இருக்கும்; தேசிய காங்கிரஸ் அல்ல.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் சரிவையும் குடும்ப அரசியலின் சரிவையும் நாம் பார்ப்போம். தேர்தலுக்குப் பிறகு குடும்ப கட்சிகள் எதுவும் தாக்குப்பிடிக்காது. முழுமையான வளர்ச்சி அரசியல்தான் நாட்டின் புதிய அரசியலாக உருவெடுக்கும். சமீபத்தில் அசாமில் ரூ.16,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

அவர் மீண்டும் அசாம் வருகிறார். இம்மாதம் 23-ம் தேதி ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட இருக்கிறார். அவர் எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் எத்தகைய வளர்ச்சி ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் பார்க்க முடியும். பிரதமர் மோடியின் தலைமையில் கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்திருப்பது வெறும் ட்ரெயிலர்தான். முழு படம் இனிமேல்தான் வர இருக்கிறது.

நான் இஸ்லாமியர்களுக்கு எதிரானவன் கிடையாது. நான், ஒவைசிக்கு ராகுல் காந்திக்கு எதிரானவர். யார் வேண்டுமானாலும் என்னோடு அசாமுக்கு வந்து இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் எனக்கு உள்ள வரவேற்பை பார்க்கலாம். அவர்கள் என் மீது எவ்வாறு அன்பு காட்டுகிறார்கள் என்பதை காணலாம். ஒருவர் இரண்டு திருமணம் செய்து கொள்வது என்பது குரானில் இல்லை. ஒவ்வொருவரும் தங்கள் புனித நூல்களை மதிக்க வேண்டும்.

வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் ஒரேமாதிரியானவை அல்ல. மணிப்பூரை எடுத்துக்கொண்டால், அங்கு உள்ள பிரச்சினை என்பது மெய்தி, குகி என இரண்வு சமூகங்களுக்கு இடையிலானது. இரண்டு தரப்புமே பாஜகவை எதிர்ப்பதில்லை. இரண்டு தரப்புக்கும் இருக்கும் வலியைப் போக்க பாஜக முயல்கிறது. எனவேதான் இருதரப்புமே பாஜக தலைவர்களை சந்தித்துப் பேசுகிறார்கள்.

இந்தியா – மியான்மர் இடையே வேலி அமைக்கப்படும் என இந்திய அரசு அறிவித்தது. அதனை மெய்தி சமூகம் வரவேற்றது. ஆனால், குகி சமூகம் எதிர்க்கிறது. வட கிழக்கில் பல விதமான முரண்பாடுகள் இருக்கின்றன. அவை பாஜகவால் உருவாக்கப்பட்டவை அல்ல. ஆரம்பத்தில் இருந்தே இருக்கக்கூடியவை. எனவே, யாருமே பிரதமர் மோடியை விமர்சிப்பதில்லை. குகி அல்லது மெய்தி என இரு தரப்பிலும் யாராவது பிரதமர் மோடியை விமர்சித்து நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.