புதுச்சேரி: புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் உடல், பாப்பம்மாள் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக, உடல் அடக்கம் செய்வதற்காக சிறுமியின் இல்லத்தில் இருந்து மயானத்துக்கு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். 10 மணிக்கு தொடங்கிய ஊர்வலம் மயானத்தை அடையும் முன்பாக வழிநெடுகிலும் பொதுமக்கள் சிறுமிக்கு அஞ்சலி செலுத்தினர். பொதுமக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட சிறுமியின் உடல் பாப்பம்மாள் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சிறுமியின் உடலுடன் அவரின் புத்தகப்பை பை மற்றும் பொம்மைகள் என அவர் பயன்படுத்திய பொருட்கள் சேர்த்து புதைக்கப்பட்டன. முன்னதாக, இன்று காலை புதுச்சேரி மாநில டிஜிபி ஸ்ரீனிவாஸ் சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
விசாரணை தொடக்கம்: சிறுமி கொலை வழக்கில் முழு விசாரணை நடத்த, ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு அமைத்து புதுச்சேரி அரசு நேற்று இரவு உத்தரவு வெளியிட்டது. இதையடுத்து இந்தக் குழு, சிறுமி கொலை வழக்கு ஆவணங்களை பெற்று கொண்டு, விசாரணையை இன்று காலை தொடங்கியது. சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் இருக்கும் மற்ற ஐந்து நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
சிறுமி கொலை செய்யப்பட்ட விவேகானந்தன் வீட்டில், இன்று காலை தடய அறிவியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அங்குள்ள தடயங்களை சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விசாரணை தொடர்பாக போலீஸ் வட்டாரங்களில் கூறுகையில், குற்றவாளிகள் இரண்டு பேர் மற்றும் சந்தேகப்படக்கூடிய ஐந்து நபர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்காக, ஜிப்மர் ஆய்வுகத்துக்கு அனுப்பி வைக்கபட்டு உள்ளது என்று குறிப்பிட்டனர்.
போலீஸ் அதிகாரிகள் மாற்றம்:
இதற்கிடையே, சிறுமி கொலையில் போலீஸார் அலட்சியம் காட்டியதாக எழுந்த புகாரையடுத்து, முத்தியால்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை கூண்டோடு மாற்ற அம்மாநில முதல்வர் ரங்கசாமி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பின்னணி: புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகரைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 9 வயது மகள் கொலைசெய்யப்பட்டு, கழிவுநீர்க் கால்வாயில் சாக்கு மூட்டையில் வீசப்பட்டிருந்தாள். கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று முன்தினம் சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், சோலை நகரைச் சேர்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன்(56) ஆகியோரை நேற்று கைது செய்தனர். வீட்டின்முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, சற்று தூரத்தில் உள்ள விவேகானந்தன் வீட்டுக்கு கருணாஸ் அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரும், விவேகானந்தனும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதில் மூச்சுத் திணறி மயங்கி விழுந்த சிறுமியை கொலை செய்து, கை, கால்களை கட்டி, உடலை வேட்டியில் மூட்டையாகக் கட்டி, வீட்டுக்கு பின்புறமுள்ள கழிவுநீர்க் கால்வாயில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து புதுச்சேரி முத்தியால்பேட்டை சின்ன மணிக்கூண்டு அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பினர் இசிஆர் சிவாஜி சிலைஅருகில் இருந்து பேரணியாகப் புறப்பட்டுச் சென்று, முத்தியால்பேட்டை காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சில இளைஞர்கள் பேருந்துகளின் மீது ஏறி கோஷமிட்டனர். போலீஸார் லேசான தடியடி நடத்தி, அவர்களைக் கலைத்தனர்.
புதுச்சேரி சட்டக் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடற்கரை சாலை நேரு சிலை அருகே சிறு வியாபாரிகள் கடையடைப்பு செய்தனர். இதேபோல, பல்வேறு இடங்களிலும் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்கள் சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து, கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வரை உடலைவாங்க மாட்டோம் எனத் தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த முதல்வர், ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்தார். இதனிடையே கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் ஜிப்மர் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
போதையில் நடந்த கொடூரம்: இந்த கொடூர சம்பவம் போதையில் நடந்ததாக பாதிக்கப்பட்ட தரப்பினரும், மறியலில் ஈடுபட்ட மக்களும் குறிப்பிட்டு வருகின்றனர். பிடிபட்ட குற்றவாளிகளிடம் முதல்கட்டமாக விசாரணை நடத்திய காவல் துறையினரும் இதை உறுதி செய்துள்ளனர். பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம் புதுச்சேரி, தமிழகத்தில் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டியுளளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், “புதுச்சேரியில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட கஞ்சா குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிலோ கணக்கில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைப் பிடித்துள்ளோம். கஞ்சா நடமாட்டம் இருப்பது தெரியவந்தால், சமுதாயத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் முன்வந்து காவல் துறைக்குப் புகார் தெரிவிக்கலாம். புகார் அளிப்போரின் விவரம் ரகசியம் காக்கப்படும்” என்றார்.