பொருளாதாரம் வலுவடைந்திருப்பதால் தேவையான அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன 

மிக அவசியமான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அரசாங்கம் தற்போது ஆரம்பித்துள்ளதென நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்தார்.

இந்தியா, சீனா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் இந்நாட்டில் முதலீட்டுக்காக முன்வந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,

“பொருளாதார நெருக்கடியால், கடந்த காலத்தில் எவ்விதமான அபிவிருத்தி திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. ஆனால், தற்போது பொருளாதாரம் ஓரளவு வலுவான நிலைமைக்கு திரும்புவதால் அவசியமான அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் சீன உதவியின் கீழ் 2000 வீடுகளை அமைப்பதற்கான திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. மேலும், மாடிக் குடியிருப்புகளில் வசிப்போருக்கு உரிமத்தை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், “மலைநாட்டு தசாப்தம்” அபிவிருத்தித் திட்டத்தின் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், கரையோர மற்றும் தாழ்நில அபிவிருத்தி நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் கீழ் நாடளாவிய ரீதியில் பிரதேச செயலக மட்டத்தில் பல அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

வர்த்தக நடவடிக்கைகளில் இருந்து விலகும் கொள்கையின் கீழ் கொழும்பு ஹில்டன் ஹோட்டலை தனியார் துறை முதலீட்டிற்காக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி ஏற்கனவே நான்கு வர்த்தகர்கள் அதற்காக முன் வந்துள்ளனர்.

ஆனால் அரசாங்கம் எதிர்பார்க்கும் முதலீடு நிச்சயமாக அங்கு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் .மேலும் எமது அமைச்சின் கீழ் உள்ள ஹயாத் ஹோட்டலின் 50% பணிகள் நிறைவடைந்துள்ளன. அதற்கான முதலீட்டாளரையும் தேடுகிறோம். டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையின் தாமரை கோபுரத்திலிருந்து லேக்ஹவுஸ் சுற்றுவட்டம் வரையிலான இரு பக்கங்களையும் அபிவிருத்தி செய்வதற்கு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பில் உள்ள பேர வாவிகளை சுத்தப்படுத்தும் ஜப்பானிய அரசாங்கத்துடனான திட்டத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. அடுத்த மாதம் இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சாதாரண மழைக் காலத்திலும் வெள்ளத்தில் மூழ்கும் கொழும்பு நகரில் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துவதற்கான திட்டத்தையும் எமது அமைச்சு வகுத்துள்ளது. நிதி ஒதுக்கீடுகளின் அடிப்படையில் எதிர்கால பணிகளை முன்னெடுக்க எதிர்பார்க்கிறோம்.

அதேபோல் இந்தியா, சீனா மற்றும் பல்வேறு தேற்கத்திய நாடுகளும் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளன. நாட்டின் பொருளாதார நிலைமை வலுவடைந்திருப்பதால் முதலீட்டாளர்கள் பார்வை இலங்கையின் மீது திரும்பியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.