வேலூர் தொகுதி சிட்டிங் எம்.பி கதிர் ஆனந்தையே மீண்டும் வேட்பாளராக முன்னிறுத்த முயல்கிறார் அவரின் தந்தையும், தி.மு.க-வின் பொதுச்செயலாளருமான துரைமுருகன். ‘தனது ஒரே அரசியல் வாரிசு கதிர் ஆனந்த் தான்’ என்பதால் அரசியலில் அவரை அடுத்தக் கட்டத்துக்கு வளர்த்தெடுக்கும் முயற்சியிலும் துரைமுருகன் ஈடுபட்டிருக்கிறார். மீண்டும் களத்துக்கு வருவதை உறுதிப்படுத்தும் விதமாக, நேற்றைய தினம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தந்தை துரைமுருகன் முன்னிலையில் விருப்ப மனுவும் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் கதிர் ஆனந்த். இது குறித்துப் பேசுகின்ற வேலூர் தி.மு.க-வினர் சிலர், ‘‘உள்ளூர் கட்சி கூட்டங்களில் ஏற்கெனவே கதிர் ஆனந்து தான் வேட்பாளர் என்பதை மறைமுகமாகச் சொல்லிவிட்டார்.

’கட்சிப் பணிகளை கவனிக்காமல், தேர்தல் பணிகளிலும் ஈடுபடாமலிருந்தால், தேர்தலுக்குப் பிறகு இந்த துரைமுருகன் யார் என்பது அவர்களுக்குத் தெரியவரும். நான் யாரிடமும் கேட்க வேண்டியதே கிடையாது. நான்தான் பொதுச்செயலாளர். முரசொலியில் கட்டம் கட்டிவிடுவேன்’ என எச்சரிக்கையும் செய்திருக்கிறார். தந்தை இருக்கிற தன்னம்பிக்கையோடு, வேலூர் நாடாளுமன்றத் தொகுதி முழுவதும் கதிர் ஆனந்த் வலம் வரத் தொடங்கிவிட்டார். கட்சியினரும் தேர்தல் பணிகளில் ஈடுபடத் தயாராகிவிட்டோம்’’ என்கின்றனர்.
இதேபோல, கைத்தறித்துறை அமைச்சர் ராணிப்பேட்டை காந்தியின் மகன் வினோத் காந்தியும் அரக்கோணம் தொகுதியைக் குறிவைத்து இன்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்திருக்கிறார். இவர் குறித்துப் பேசுகின்றவர்கள், ‘‘வினோத் காந்தி தி.மு.க-வின் சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளராக இருக்கிறார். இவருக்கு அரக்கோணம் தொகுதியின் எம்.பி-யாக வேண்டுமென்ற கனவும், ஆசையும் அதிகமிருக்கிறது.
இவருக்கான வாய்ப்பு என்பது மிகவும் குறைவுதான். ஆனாலும், 40-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை தனக்காக விருப்ப மனு அளிக்க வைத்திருக்கிறார் வினோத் காந்தி. இந்த நிர்வாகிகள் அனைவரும் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்தவர்கள்தான். மீதமிருக்கிற ஆற்காடு, காட்பாடி, திருத்தணி ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் வினோத் காந்திக்கு மவுசு கிடையாது.

வினோத் காந்தியை முன்னிறுத்தும் விதமாக, அந்த மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் இருந்தும் அவருக்காக விருப்ப மனு கொடுக்க யாரும் வரவில்லை. அதே சமயம், சிட்டிங் எம்.பி-யாக இருக்கிற ஜெகத்ரட்சகனுக்கு கடந்த முறை 184 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். இந்த முறை அவருக்காகவும் யாரும் விருப்ப மனு கொடுக்க முன்வரவில்லை. இவர்களை தவிர ‘எம்.பி சீட்’ ரேஸிலிருந்த ராணிப்பேட்டை மாவட்ட பொருளாளர் ஏ.வி.சாரதியும் இன்று காலைதான் விருப்ப மனு கொடுத்திருக்கிறார். ‘தனக்காக வேறு யாரும் விருப்ப மனு கொடுக்க வேண்டாம். தலைமை முடிவுக்கு கட்டுப்படலாம்’ என்று ஆதரவாளர்களிடம் ஏ.வி.சாரதி சொல்லிவிட்டார்” என்கின்றனர்.