புதுடெல்லி: மத்திய அரசு மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) விண்ணப்ப வலைதளங்களின் சில பிரிவுகள் ‘அவசர பராமரிப்பு’ காரணமாக முடக்கப்பட்டுள்ளன. இந்த வாரத்தில் பெரும்பாலான நாட்கள் மத்திய அரசின் ஆர்டிஐ விண்ணப்ப போர்டல் பராமரிப்பு பணி காரணமாக வேலை செய்யவில்லை.
இதேபோல், இந்தியத் தேர்தல் ஆணையமும் தனது ஆர்டிஐ விண்ணப்ப வலைதளத்தை பராமரிப்பு பணி காரணமாக முடக்கியுள்ளது. ஆர்டிஐ விண்ணப்பத்தாரர்களின் தரவுகள் (data) கசிந்து வந்ததாகவும், அதனைத் தடுக்கும் விதமாக ஆர்டிஐ போர்ட்டலில் பராமரிப்பு பணி நடந்து வருவதாகவும் பாதுகாப்பு ஆய்வாளர் கரண் சைனி என்பவர் டெக்கிரென்ச் (TechCrunch) என்ற செய்தி இணையதளத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-in) ஆனது இந்த டேட்டா லீக்கை சரிசெய்ய தேர்தல் ஆணையத்துடன் இணைந்துள்ளது. தற்போதைய நிலையில் முதல் சிக்கல் தீர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் ஆர்டிஐ வலைதளத்தைப் பொறுத்தவரை, இதுவரை பயனர்கள் இதில் புதிய விண்ணப்பங்களை தாக்கல் செய்ய முடிந்தாலும், விண்ணப்பித்த பட்டியலை சரிபார்க்க முடியாது. இந்நிலையில்தான் பராமரிப்பு பணிகள் காரணமாக மத்திய அரசின் ஆர்டிஐ வலைதளம் முடக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு வாரமாக இந்த சிக்கல் நீடிக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை (DoPT) தான் மத்திய அரசின் ஆர்டிஐ போர்ட்டலை இயக்குகிறது. இந்த தற்காலிக முடக்கம் குறித்து பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை முறையான விளக்கம் ஏதும் அளிக்கவில்லை. எனினும், “இணையதளம் முடங்கியதற்கான தகவல் ஏதும் தங்களிடம் இல்லை. அதேநேரம், இது சரியாக 15 நாட்கள் ஆகலாம்” என்று மட்டும் அதன் டெக்னிக்கல் ஏஜென்ட் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், மத்திய அரசின் ஆர்டிஐ வலைதளத்தில் இருந்து 2022-ம் ஆண்டுக்கு முந்தைய விண்ணப்பங்கள் குறித்த டேட்டாக்கள் காணாமல் போனது. பின்னர் அதுகுறித்து சர்ச்சை எழ, பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை டேட்டாக்களை மீண்டும் மீட்டெடுத்தது குறிப்பிடத்தக்கது.