
இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் இந்திரா காந்தி. 1966 -1977…, 1980 – 1984 வரை என படுகொலை செய்யப்படும் வரை பிரதமராகப் பணியாற்றியவர். தேசிய மற்றும் சர்வதேச அரசியலின் சிக்கல்களை உறுதியுடனும் எதிர்கொண்டார்.

ஜெய்பூரின் ராணியான காயத்ரி தேவி, 1962-ல், ஸ்வதந்த்ரா கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் ஜெய்ப்பூர் தொகுதியில் போட்டியிட்டு 1,75,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். `உலகின் எந்த ஜனநாயக நாட்டிலும் இவ்வளவு பெரிய வெற்றியை யாரும் பெற்றதில்லை’ என கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார். இந்திரா காந்தியை கடுமையாக விமர்சித்தவர். எமர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்.

தமிழ்நாட்டு மக்களால் `அம்மா’ என அழைக்கப்படும் ஜெ.ஜெயலலிதா, தமிழ்நாட்டின் முக்கியத் தலைவராகவும், மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சராகவும் வலம் வந்தார். உறுதியான தலைமைத்துவப் பண்பால் தமிழக அரசியலில் தவிர்க்கமுடியாதவராக தடம் பதித்தார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மம்தா பானர்ஜி, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸை (TMC) நிறுவி, மாநில அரசியலில் நிலவிவந்த இடது முன்னணியின் ஆதிக்கத்தை முறியடித்து, இன்றுவரை அசைக்க முடியாதவராக களம் காண்கிறார்.

மாயாவதி, இந்திய அரசியலில் ஒரு முக்கிய நபராக இருந்து, விளிம்புநிலை சமூகங்களின் நலனுக்காகப் போராடியவர். உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை (பிஎஸ்பி) நிறுவி, வலிமைமிக்க தலைவராக உருவெடுத்தவர்.

சுஷ்மா ஸ்வராஜ், இந்திய அரசியலில் தலைசிறந்தவர். தன்னுடைய பேச்சுத்திறன், அரவணைப்புப் பண்பால் அறியப்பட்டார். பா.ஜ.க-வின் முதல் பெண் முதல்வர். மத்திய அமைச்சர், கட்சியின் பொதுச்செயலாளர், செய்தித் தொடர்பாளர், எதிர்க்கட்சித் தலைவர், வெளியுறவுத்துறை அமைச்சர் எனப் பல பதவிகளை வகித்திருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி. 1990-களின் பிற்பகுதியில் இறுதிக்கட்டத்தில் இருந்த கட்சிக்கு புத்துயிர் அளித்த பெருமைக்கு சொந்தக்காரர். தற்போதுவரை அரசியலில் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி. ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரான இவர், அந்த மாநிலத்தின் முதல் பெண் முதல்வராவார்.

ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா. 1984-ல் அரசியலில் நுழைந்து, 2003- 2008 -ல், ராஜஸ்தான் முதலமைச்சராக பதவியேற்றார். 2013 – 2018 வரை இரண்டாவது முறையாக முதல்வராக இருந்தார்.