‘தேசிய விருதை ரூ.1.5 லட்சத்துக்கு விற்று மாணவர்களுக்கு தந்துவிட்டேன்’ – இயக்குநர் லெனின்

புதுச்சேரி: கல்விக்கான சிற்பிகளின் சிற்பங்கள் ஆவணப்படத்துக்காக குடியரசுத் தலைவர் கையால் வாங்கிய தேசிய விருதை ரூ.1.5 லட்சத்துக்கு விற்றுவிட்டேன். அப்பணத்தை மேல்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக தந்துவிட்டேன். இதுவரை நான் ஆறு தேசிய விருதுகள் வாங்கியும் அவை என்னிடம் இல்லை என்று இயக்குநர் லெனின் தெரிவித்தார்.

புதுச்சேரியில் அலையன்ஸ் பிரான்சிஸ் மற்றும் புதுச்சேரி திரை இயக்கம் சார்பில் உலகத் திரை ஆளுமைகளின் திரைப்படங்கள் தொடர் திரையிடல் நிகழ்வு இன்று மாலை நடந்தது. இந்நிகழ்வில் இயக்குநர் மற்றும் எடிட்டர் லெனின் இயக்கத்தில் கடந்த 2023-ல் கல்விக்காக தேசிய விருது பெற்ற “சிற்பிகளின் சிற்பங்கள்” ஆவணப்படம் திரையிடப்பட்டது. கல்வி மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் விதத்தில் உருவாக்கப்பட்டது.

அதையடுத்து நடந்த பாராட்டு விழாவில் இயக்குநர் லெனின் பேசுகையில், “சிற்பிகளின் சிற்பங்கள் ஆவணப்படத்தை ஏழரை மாதங்களாக என்னுடன் கூட வேலை செய்யும் இளைஞர்களுடன் இணைந்து தயாரித்தோம். முதலில் நகர்புறங்களில் படப்பிடிப்பு நடத்துவதாக இருந்ததை மாற்றி கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய ஆசிரியர்களை சந்தித்து இந்த படத்தை எடுக்கலாம் என்று முடிவு செய்தோம். அந்த அடிப்படையில் இதை தயாரித்தோம் கல்விக்காக இந்த ஆவணப்படத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

குடியரசுத் தலைவர் கையால் அந்த விருதை வாங்கினேன். அதை உங்களுக்கு காண்பிக்க கொண்டு வரலாம் என்று நினைத்தேன். ஆனால், இயலவில்லை. ஏனென்றால் அந்த விருதை சுமார் ஒன்றரை லட்ச ரூபாய்க்கு நான் விற்று விட்டேன். கல்விப் பிரிவில் கிடைத்த இவ்விருது விற்ற பணத்தை மேல்படிப்பு கற்கும் மாணவர்களுக்கு இலவசமாக தந்து விட்டேன். விருதுகளை நான் வீட்டில் வைத்துக்கொள்வதில்லை.

நான் 6 தேசிய விருதுகள் வாங்கியும் அவை என்னிடம் இல்லை. என் மனைவி, குழந்தைகளிடம் காட்டுவதும் இல்லை. என் வாழ்க்கை மகிழ்வுடன் செல்கிறது. தேசிய விருது பெற்ற சிற்பிகளின் சிற்பங்கள் ஆவணப்படத்தை இதுவரை தமிழகத்தில் கூட காட்டவில்லை. முதலில் புதுச்சேரியில் காட்டுகிறேன். ஆவணப்படங்கள் சமூகத்துக்கு மிக அவசியம். ஒருவிஷயத்தை ஆழமாக சொல்ல எளிமையான ஊடகம் இது. நான் பெரும்பகுதி ஆவணப்படங்களைதான் இயக்குகிறேன். இதில் இருந்து தான் ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளை கற்கிறேன். பல விஷயங்களை கற்று தரும் ஆவணப்படங்களே எனக்கு குரு” என அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் புதுச்சேரி திரை இயக்க செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் களப்பிறன், திரை இயக்குனர் சிவக்குமார், அலையன்ஸ் பிரான்சிஸ் இயக்குநர் லாரன்ட் ஜாலிசஸ் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர்.

இயக்குனர் லெனின் அவர்களுக்கு தேசிய விருது பெற்றமைக்காக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க சங்கம் புதுச்சேரி திரை இயக்கம் பாராட்டி நினைவு பரிசு வழங்கியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.