நொய்டா:புதுடில்லி அருகே, நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா ஆகிய இடங்களில் மஹா சிவராத்திரி சிறப்பு உணவு சாப்பிட்ட 93 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மஹா சிவராத்திரி விழா நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது. புதுடில்லி அருகே, உத்தர பிரதேசத்தின் கிரெட்டர் நொய்டாவின் கல்வி மையமான நாலெட்ஜ் பார்க் பகுதியில் உள்ள ஆர்யன் ரெஸிடென்சியில் பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கியுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு நடந்த மஹாசிவராத்திரியை முன்னிட்டு வழங்கிய ‘குட்டு கா அட்டா’ என்ற சிறப்பு உணவை சாப்பிட்டனர். சற்று நேரத்தில் 76 மாணவர்களுக்கு கடும் வயிற்று வலி, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. சிலருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்ட மாணவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
அதேபோல, நொய்டாவின் பரோலா கிராமத்தில் நடந்த மஹா சிவராத்திரி விழாவில் வழங்கப்பட்ட ‘குட்டு கா அட்டா’ என்ற உணவை சாப்பிட்ட பெண்கள் உட்பட 17 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சைக்கு பின் அனைவரும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.
இதுகுறித்து, கவுதம் புத்தா நகர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி அர்ச்சனா தீரன் கூறியதாவது:
பரோலா கிராமம் மற்றும் ஆர்யன் ரெசிடென்சி விடுதி ஆகிய இடங்களில் உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றை ஆய்வுக்காக லக்னோவுக்கு அனுப்பி வைப்போம். ஆய்வு அறிக்கை கிடைத்த பின், சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம். பொது சுகாதாரம் தொடர்பான வழக்குகளில் விசாரணையை விரைவுபடுத்த முயற்சி செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement