பீதர் : ஆந்திராவில் இருந்து, கர்நாடகா வழியாக மஹாராஷ்டிராவுக்கு கடத்த முயற்சித்த, 15.50 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை, பீதர் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, இருவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகாவை போதைப் பொருள் இல்லாத மாநிலமாக்க, மாநில அரசு முயற்சிக்கிறது. பெங்களூரு உட்பட பல நகரங்களில் அவ்வப்போது சோதனை நடத்தி, கிலோ கணக்கில் போதைப் பொருட்களை பறிமுதல் செய்கின்றனர். ஆயினும், இதை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில், ஆந்திராவில் இருந்து மஹாராஷ்டிராவுக்கு பீதர் வழியாக, பெருமளவில் கஞ்சா கடத்தப்பட இருப்பதாகவும்; இதை கண்காணிக்கும்படியும் தேசிய போதைப் பொருள் கட்டுப்பாடு குழு அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.
எனவே, பீதர் போலீசார் வாகனங்கள் கண்காணிப்பை பலப்படுத்தினர். இரவு, பகலாக சோதனை சாவடிகளில் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
பீதர், அவுராதின், வனமாரபள்ளி சோதனை சாவடி அருகில், நேற்று அதிகாலை போலீசார் வழக்கம் போன்று, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற லாரியை, தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
சரக்குகளுக்கு இடையே பதுக்கி வைக்கப்பட்ட, 1,596 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கர்நாடகாவில் இந்த அளவில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது, இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, பீதர் எஸ்.பி., சென்ன பசவண்ணா லங்கோடி கூறியதாவது:
கஞ்சா கடத்துவதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில், அவுராதின், வனமாரப்பஹள்ளி சோதனை சாவடி அருகில், போதைப் பொருள் கட்டுப்பாடு குழுவின் உதவியுடன், வாகனங்கள் சோதனையிடப்பட்டன. அப்போது சந்தேகத்துக்கு இடமாக வந்த லாரியை சோதித்த போது, 1,596 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கபட்டது. இதன் மதிப்பு 15 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும்.
லாரி ஓட்டுனர், கிளீனர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. லாரி உரிமையாளர் தலைமறைவாக இருக்கிறார். அவரை தேடி வருகிறோம். அவரை பிடிக்க அவுராத் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருளை கட்டுப்படுத்தும் எங்களின் நடவடிக்கை தொடரும். நடப்பாண்டு ஜனவரியிலும், கஞ்சா கடத்தியதால் இதே லாரி பறிமுதல் செய்யப்பட்டது. பிப்ரவரி 14ல் நீதிமன்றம் மூலமாக லாரியை மீட்டு சென்றனர்.
மீண்டும் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். இம்முறை பீதர் வழியாக மஹாராஷ்டிராவுக்கு கஞ்சா கடத்த முயன்றது, விசாரணையில் தெரிந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
….பாக்ஸ்….
போதையை ஒழிக்க
முதல்வர் அழைப்பு
கர்நாடக போலீஸ் துறையின் பொன் விழாவை முன்னிட்டு, பெங்களூரின் விதான் சவுதா படிகளின் மீது, நேற்று சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
கர்நாடகாவை போதைப் பொருள் இல்லாத மாநிலமாக்க, அரசு உறுதி பூண்டுள்ளது. இன்றைய இளம் தலைமுறையினர், போதை பொருள் பழக்கத்துக்கு பலியாவது வருத்தமளிக்கிறது. இதை கட்டுப்படுத்த, அரசு பல நடவடிக்கைகள் எடுத்தும், பலன் கிடைக்கவில்லை.
போதை பொருளை ஒழிப்பது, அரசால் மட்டும் முடியாது. சமுதாயமும் கை கோர்க்க வேண்டும். அப்போதுதான் கர்நாடகா மட்டுமின்றி, இந்தியா முழுதையும் போதை பொருள் இல்லாத நாடாக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்