"அரசியலமைப்பை மாற்ற 400 இடங்களை வென்றாக வேண்டும்" – பாஜக எம்.பி-யின் பேச்சும் பாஜக-வின் விளக்கமும்!

டாக்டர் அம்பேத்கர் தலைமையில் 1947 ஆகஸ்ட் 29 அன்று அரசியல் வரைவுக்குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, 2 வருடங்கள் 11 மாதங்கள் 18 நாள்கள் பல்வேறு ஆய்வுகள், ஆலோசனைகள், விவாதங்களுக்குப்பிறகு இந்தியாவுக்கென தனித்துவமான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இறுதி வடிவை அங்கீகரித்து அரசியல் நிர்ணய சபையில் இடம் பெற்றிருந்த 284 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, 1950 ஜனவரி 26-ம் நாள் முதல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடை முறைக்கு வந்தது.

அம்பேத்கர்

ஆனால், கடந்த நவம்பர் மாதம் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என். ரவி சட்டக் கல்லூரி ஒன்றில்,“நமது அரசியலமைப்பு சட்டம் தனித்துவம் வாய்ந்த பல்வேறு குழுக்கள் மூலம் மிகுந்த அழுத்தங்களுக்கு இடையே உருவாக்கப்பட்டது. அதனால்தான் இன்றளவும் அது முழுமை பெறாத ஆவணமாகவே உள்ளது” எனப் பேசியது சர்ச்சையானது.

அதைத் தொடர்ந்து, மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க தலைமையிலான அரசு, அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற நினைப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

கடந்த மாதம் கர்நாடகாவில் ‘அரசியலமைப்பு சட்டமும் தேசிய ஒருமைப்பாடும்’ என்ற மாநாட்டில் கர்நாடக முதல்வர் சித்தராமையா,“பாபாசாகேப் அம்பேத்கர் பல்வேறு தரப்பினருடன் போராடி ச‌மத்துவத்தை வலியுறுத்தும் அரசியலமைப்பு சட்டத்தை இயற்றினார். ஆனால் பா.ஜ.க-வினர் அதனை மாற்ற வேண்டும் என துடிக்கிறார்கள். சமத்துவமின்மையை விரும்புவர்களால் நாட்டுக்கே ஆபத்து நேரிடும்” எனப் பேசினார்.

ஆளுநர் ரவி

இந்த நிலையில், கடந்த 9-ம் தேதி கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தின் சித்தாபுராவில் உள்ள ஹலகேரி என்ற கிராமத்தில், முன்ன்னாள் அமைச்சரும் பா.ஜ.க எம்.பி-யுமான அனந்த் குமார் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்.

அப்போது,“வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவேண்டும். இந்த முறை 400-க்கும் மேற்பட்ட இடங்களை பெற வேண்டும் எனப் பிரதமர் மோடி ஏன் கூறினார்… தற்போது மக்களவையில் 2/3 பெரும்பான்மையாக நாம்தான் இருக்கிறோம். ஆனால், மாநிலங்களவையில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை. மாநில அரசுகளிலும் நமக்குத் தேவையான பெரும்பான்மை இல்லை.

எனவே, அரசியலமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செயல்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், மாநில அரசுகளிலும் கணிசமான பெரும்பான்மையைப் பெறுவது அவசியம். இந்துக்களை ஒடுக்கும் விதிகள் மற்றும் சட்டங்களை திருத்த அரசியலமைப்பில் மாற்றங்களை செய்யவேண்டும். அதற்கு, இந்த பெரும்பான்மை போதாது.” எனப் பேசினார். இது அரசியல் அரங்கில் பேசுபொருளானது.

அதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,“பாபா சாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்பை அழிப்பதே மோடி மற்றும் பா.ஜ.க-வின் இறுதி இலக்கு. பா.ஜ.க நீதி, சமத்துவம், சிவில் உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை வெறுக்கிறார்கள்.

மோடி – ராகுல் காந்தி

சமூகத்தை பிளவுபடுத்துவதன் மூலமும், ஊடகங்களை அடிமைப்படுத்துவதன் மூலமும், கருத்து சுதந்திரத்தை முடக்குவதன் மூலமும், சுதந்திர அமைப்புகளை முடக்குவதன் மூலமும், எதிர்க்கட்சிகளை ஒழிப்பதன் மூலமும், சதி செய்து இந்தியாவின் மாபெரும் ஜனநாயகத்தை குறுகிய சர்வாதிகாரமாக மாற்ற விரும்புகிறார்கள். சுதந்திர இந்தியாவின் மாவீரர்களுடன் இணைந்து, இந்த சதிகளை முறியடிப்போம். எங்கள் கடைசி மூச்சு வரை அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவோம்” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே,“மோடி அரசும், பா.ஜ.க-வும், ஆர்.எஸ்.எஸ்-ஸும் ரகசியமாக சர்வாதிகாரத்தை திணிக்க விரும்புகின்றனர். இதன் மூலம் இந்திய மக்கள் மீது தங்கள் ‘மனுவாத மனநிலையை’ திணித்து, எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி-களின் உரிமைகளைப் பறிப்பார்கள். பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ்-ன் இத்தகைய நோக்கங்கள், நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களால் வலியுறுத்தப்பட்ட இறையாண்மை, சமூக நல்லிணக்கம், மதச்சார்பற்ற ஜனநாயகம் ஆகியவற்றின் மீதான நேரடித் தாக்குதல்.

மல்லிகார்ஜுன் கார்கே

நமது ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாப்பது ஒவ்வொரு இந்தியரின் வலிமையான பொறுப்பு” எனத் தெரிவித்திருக்கிறார்.

கர்நாடக காங்கிரஸ் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில்,“அனந்த் குமார் 2017-ம் ஆண்டு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்ப்பாட்டுக்கான மத்திய அமைச்சராக இருந்தபோது, நான் அரசியலமைப்பை மதிக்கிறேன். ஆனால் காலத்திற்கு ஏற்ப அரசியலமைப்பு மாறியுள்ளது, எதிர்காலத்தில் அது மாறும். அரசியலமைப்பை மாற்றுவதற்காக நாங்கள் இங்கு வந்துள்ளோம்’ எனப் பேசினார். தற்போதும் அதே கருத்தை வலியுறுத்தி பேசியிருக்கிறார்.

அவருடைய கருத்தின் உண்மையான நோக்கம் என்ன? அரசியல் சட்டத் திருத்தம் பா.ஜ.க-வுக்கு தேர்தல் பிரச்னையா? தெருவில் பேச வேண்டிய பிரச்னையா? ‘திருத்தம்’ செய்ய வேண்டுமா ‘மாற்றம்’ செய்ய வேண்டுமா? பா.ஜ.க எப்பொழுதும் அரசியல் சட்டத்திற்கு எதிராக பிரச்னையை உருவாக்குவது ஏன்? பாபாசாகேப் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் பா.ஜ.க உறுப்பினர்களால் வாழ முடியவில்லையா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறது.

மோடி

இந்த நிலையில், கர்நாடக பா.ஜ.க தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில்,“எம்.பி. அனந்த் குமார் ஹெக்டே-வின் அரசியலமைப்புச் சட்டம் குறித்த கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்துகள். அது பா.ஜ.க-வின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை. பா.ஜ.க தேசத்தின் அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்காக அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. எம்.பி அனந்த குமார் ஹெக்டேவின் கருத்துகள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.