பூரம் விழாவுக்கு சிறப்பு பெற்ற திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக நடிகர் சுரேஷ் கோபி களமிறங்கியுள்ளார். காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் முதல்வர் கே.கருணாகரனின் மகன் கே.முரளிதரனும், சி.பி.ஐ கட்சி சார்பில் சுனில் குமார் வேட்பாளராக இறங்கி உள்ளார். பா.ஜ.க-வின் நம்பிக்கைக்குரிய தொகுதிகளில் ஒன்றாக திருச்சூர் உள்ளது. இதற்கிடையே திருச்சூரில் பா.ஜ.க நிர்வாகிகளிடம் டென்ஷன் ஆன சுரேஷ் கோபி காரில் இருந்தபடி நிர்வாகிகளிடம் பேசும் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.
திருச்சூர் சாஸ்தாம்பூ காலனி பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார் சுரேஷ் கோபி. அதில் மக்கள் எண்ணிக்கை குறைவாக இருந்துள்ளது. இதையடுத்து காரில் ஏறி புறப்படும் முன்பு சுரேஷ் கோபி பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் பேசிய வீடியோதான் அது என்கிறார்கள். காரில் இருந்தபடி பேசும் சுரேஷ் கோபி, “பூத் கமிட்டி நிர்வாகிகளின் வேலை என்ன. அப்படி வாக்காளர்களை சேர்க்காமல் இருக்கும் இடத்துக்கு எதற்காக என்னை அழைத்து வந்தீர்கள். நீங்கள் எனக்கு ஓட்டு வாங்கித்தருவதற்காக அழைத்தீர்கள் என்றால் வாக்களிக்கும் மக்கள் இங்கு வந்திருக்க வேண்டுமே.

பூத் இன்சார்ஜிக்கும், பூத் பிரசிடெண்டுக்கும் என்ன பொறுப்பு இருக்கிறது. அப்படியானால் ஏன் என்னை இங்கு அழைத்து வந்தீர்கள்? எதற்காக அழைத்து வந்தீர்கள். எனக்கு நீங்கள் ஓட்டு வாங்கி தர வேண்டும். ஓட்டு போடும் வாக்காளர்களிடம் நீங்கள் பேச வேண்டும். பூத் கமிட்டி நிர்வாகிகள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். நாம் இறங்கியிருப்பது யுத்தத்துக்கு அல்ல. மக்களுக்கான ஆதாயத்தை ஏற்படுத்திக்கொடுக்கத்தான் களமிறங்கி உள்ளோம். எனக்கு நீங்கள் ஒத்துழைத்து வேலை செய்யாமல் இருந்தால் நான் நாளை திருவனந்தபுரத்துக்கு சென்று விடுவேன். திருவனந்தபுரத்தில் பா.ஜ.க வேட்பாளரான ராஜிவ் சந்திரசேகருக்கு பிரசாரம் செய்வேன். இங்கு போட்டியிடவேண்டும் என எனக்கு எந்த விருப்பமும் இல்லை. நான் இன்னும் நாமினேஷன் தாக்கல் செய்யவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்” எனக் காட்டமானார்.
சாஸ்தாம்பூ பழங்குடியினர் காலனி பகுதியில் தன்னை அழைத்து நிகழ்ச்சி நடத்திய நிர்வாகிகள் அதிக அளவில் மக்களை திரட்டாமல் இருந்ததும், வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்காமல் இருந்ததும் சுரேஷ் கோபியை அப்படி பேச வைத்ததாக நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது. சுரேஷ் கோபி காரில் இருந்து பேசும்போது வெளியே நின்று கொண்டிருந்த சில பெண் நிர்வாகிகள் இனி தேர்தல் பணியை வேகப்படுத்துவதாக கூறியதை தொடர்ந்து சுரேஷ் கோபி புறப்பட்டுச் சென்றார். ஏற்கனவே பா.ஜ.க பேரணியில் சுரேஷ் கோபி நடனமாடும் வீடியோ ஒன்று வைரலாகி ஒருந்தது. இந்த நிலையில் சுரேஷ் கோபி நிர்வாகிகளிடம் கோபப்படும் வீடியோவும் வைரலாகியுள்ளது.

இதுகுறித்து சுரேஷ் கோபி கூறுகையில், “நான் பழங்குடியினர் காலனியில் நிகழ்சியில் கலந்துகொண்ட சமயத்தில் மக்கள் இருந்தார்கள். நான் சாப்பிட்டுவிட்டு காரில் ஏறி புறப்படும் சமயத்தில்தான் அந்த பகுதி மக்கள் வந்து 18 வயது ஆன பிறகும் எங்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவில்லை என புகார் சொன்னார்கள். அதனால்தான் நான் கட்சி நிர்வாகிகளிடம் அப்படி பேசினேன். என்னுடைய கட்சி நிர்வாகிகளிடம் கேள்வி கேட்க எனக்கு உரிமை உண்டு. நாளை எம்.பி-யாக வெற்றிபெற்றுவிட்டால் அந்த பகுதியில் நான் எப்போதும் இருக்க முடியாது. அப்போது மக்களிடம் இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும். அதற்கான வழிகாட்டுதலைத்தான் நான் செய்தேன். அதற்கான அதிகாரம் எனக்கு உள்ளது. அவர்களின் பணியை அவர்கள் செய்தால்தான் என் பணியை நான் செய்ய முடியும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY