Attack on ED officials: Bengal governments petition dismissed | ஈ.டி., அதிகாரிகள் மீது தாக்குதல் : மே.வங்க அரசின் மனு தள்ளுபடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி : மேற்கு வங்கத்தில் ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றுவதற்கான உத்தரவை எதிர்த்து மேற்கு வங்க அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேற்கு வங்கத்தில், ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த ஜனவரியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக, சந்தோஷ்காலி என்னும் இடத்தில் அமைச்சர் ஜோதிபிரியோ மாலிக்கின் நெருங்கிய நண்பரும், திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகியுமான ஷாஜகான் வீட்டில் அவர்கள் சோதனை நடத்த சென்றனர்.

அப்போது, அங்கிருந்த திரிணமுல் காங்., தொண்டர்கள் அமலாக்கத் துறை அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பாக சென்ற மத்திய படையினர் மீதும் தாக்குதல் நடத்தினர். இதில் அமலாக்கத் துறை அதிகாரிகள் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த கோல்கட்டா உயர் நீதிமன்றம், தாக்குதல் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு கடந்த 5ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மேற்கு வங்க அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அடுத்த நாளே மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதிகள் பி.ஆர். கவாய், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்ற உத்தரவில் இருந்த மேற்கு வங்க அரசு மற்றும் மாநில போலீசாருக்கு எதிரான கருத்துகளை நீக்க உத்தரவிட்ட நீதிபதிகள், மேற்கு வங்க அரசின் கோரிக்கையை நிராகரித்ததுடன், மனுவையும் தள்ளுபடிசெய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.