வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் விபரங்களை, தேர்தல் ஆணையத்திடம் அளித்தது எஸ்.பி.ஐ.,
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக, 2017ல் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, நம் நாட்டை சேர்ந்த தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள், பணம் செலுத்தி தேர்தல் பத்திரங்களை வாங்கி, தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம்; இப்படி நன்கொடை அளிப்பவர்களின் விபரம் ரகசியம் காக்கப்படும்.
இந்த திட்டத்தின்படி, தேர்தல் பத்திரங்கள், பொதுத்துறை வங்கியான, எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் குறிப்பிட்ட கிளைகளில் விற்கப்பட்டன.
இத்திட்டத்தை எதிர்த்து பல்வேறு அமைப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் அளிப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் முறை செல்லாது’ என, கடந்த மாதம், 15ம் தேதி தீர்ப்பளித்தது.
இந்த பத்திரங்களை வெளியிடும், எஸ்.பி.ஐ., அது தொடர்பான தகவல்களை, மார்ச் 6ம் தேதிக்குள் தேர்தல் கமிஷனுக்கு அளிக்க வேண்டும். அந்த விபரங்களை, மார்ச், 13ம் தேதிக்குள் தன் இணையதளத்தில் தேர்தல் கமிஷன் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து இன்று தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ., அளித்தது..
மேலும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 15ம் தேதிக்குள் அந்த தகவல்களை இணையதளத்தில் வெளியிட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement